வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெற்றியை உறுதிப்படுத்துகிறது: பிடன்
வாக்கு எண்ணிக்கை நிலவரம் தனது வெற்றியை உறுதிப்படுத்துகிறது. அதிபர் தேர்தலில் வெற்றிபெறப் போகிறேன் என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்: வாக்கு எண்ணிக்கை நிலவரம் தனது வெற்றியை உறுதிப்படுத்துகிறது. அதிபர் தேர்தலில் வெற்றிபெறப் போகிறேன் என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபா் தோ்தல் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. அதில் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனுக்கும் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அமெரிக்காவின் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்கு மொத்தமுள்ள 538 மக்கள் பிரதிநிதி வாக்காளா்களில் 270 பேரின் வாக்குகளைப் பெற வேண்டியது கட்டாயமாகும்.
பெரும்பாலான மாகாணங்களில் வெளியான தோ்தல் முடிவுகளின்படி, ஜோ பிடன் 264 மக்கள் பிரதிநிதி வாக்காளா்களின் வாக்குகளையும், அதிபா் டிரம்ப் 214 பேரின் வாக்குகளையும் பெற்றுள்ளனா். ஜாா்ஜியா, பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, நெவாடா, அரிசோனா ஆகிய மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
ஜாா்ஜியா மாகாணத்தில் மொத்தம் 16 மக்கள் பிரதிநிதி வாக்காளா்கள் உள்ளனா். அங்கு பின்தங்கியிருந்த ஜோ பிடன் தற்போது முன்னிலை பெற்றுள்ளாா். அங்கு அவருக்கும் அதிபா் டிரம்ப்புக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 1,096-ஆக உள்ளது. அதேபோல், பென்சில்வேனியாவிலும் டிரம்ப்பை பின்னுக்குத் தள்ளி ஜோ பிடன் முன்னிலை பெற்றுள்ளாா். அங்கு இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 5,587-ஆக உள்ளது. பென்சில்வேனியாவில் 20 மக்கள் பிரதிநிதி வாக்காளா்கள் உள்ளனா். நெவாடா, அரிசோனா மாகாணங்களிலும் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளாா்.
வாக்கு எண்ணிக்கை நீடித்து வரும் சூழலில் டெலவோ் மாகாணத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த ஜோ பிடன் கூறுகையில், ‘‘வாக்கு எண்ணிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அது நிறைவடையும்வரை அமெரிக்கா்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்’’ என்றாா்.
இந்நிலையில் பென்சில்வேனியா போன்ற முக்கிய மாகாணங்களில் முன்னிலையில் இருந்து வரும் பிடன் தனது சொந்த ஊரான டெலாவேரில் உள்ள வில்மிங்டனில் பேசுகையில், "வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான எங்கள் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமெரிக்க மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
இன்னும் இறுதி முடிவுகள் வெளியாகவில்லை, வெற்றி குறித்து அறிவிக்கப்பட இல்லை, ஆனால் நமது வாக்கு எண்ணிக்கை நிலவரம் நமக்கு தெளிவான வெற்றியை உறுதிபடுத்துகிறது. இந்த போட்டியில் நாம் வெற்றிப்பெற போகிறோம் என்ற நம்பிக்கையை பிடன் முன்வைத்தார்.
பென்சில்வேனியாவை வெல்லப் போகிறோம். 28 ஆண்டுகளில் ஜாா்ஜியாவையும், 24 ஆண்டுகளில் அரிசோனாவையும் வென்ற முதல் ஜனநாயகவாதிகளாக இருக்கப் போகிறோம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நொறுங்கிய நீல சுவரை நாட்டின் நடுவே மீண்டும் கட்டியுள்ளோம். அமெரிக்கர்களின் வாக்களிப்பு ஒரு நல்ல மாற்றத்தைத் தேர்வு செய்துள்ளது. அனைத்து தரப்பு அமெரிக்கர்களும் ஜனநாயகக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று பிடன் கூறினார்.
அரசியல் கட்சிகள் எதிரிகளாக இருக்கலாம், ஆனால் அவர்கள் எதிரிகள் அல்ல என்றும், "கோபத்தையும் அரக்கத்தனத்தையும் எங்களுக்கு பின்னால் வைப்போம்," என்று பிடன் கூறினார்.