உலகம்

அதிபர் தேர்தலில் தோல்வி: டிரம்ப் தொடர்ந்து போராட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தல்

DIN


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது தோல்வியை டொனால்ட் டிரம்ப் ஏற்காத நிலையில், அவர் தொடர்ந்து போராட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பதவியைத் தொடரலாம் என நம்பியிருந்தார் டிரம்ப். அதிகாரபூர்வமான முழு தேர்தல் முடிவுகளும் வராத நிலையிலும், ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் அந்த நாட்டின் அடுத்த அதிபராவது உறுதியாகியுள்ளது.

நீதிமன்ற உத்தரவுகள் மூலம் மறு வாக்கு எண்ணிக்கை போன்ற ஒருசில வாய்ப்புகள் டிரம்ப்புக்கு இருந்தாலும் அவர் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லை என்றே நம்பப்படுகிறது.

எனினும், தனது தோல்வியை ஏற்கவோ, ஜோ பைடன் வெற்றி பெற்றதை அங்கீகரிக்கவோ டிரம்ப் தயாராக இல்லை.

இதையடுத்து, குடியரசுக் கட்சியினர், டிரம்ப்பின் உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் தோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு அவரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேநேரத்தில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மேலவை (செனட்) உறுப்பினரான லிண்ட்ஸே கிரஹாம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அவர், இத்தேர்தலில் டிரம்ப் தோல்வியடையவில்லை என்று கூறியுள்ளார்.

தோல்வியை ஒப்புக்கொள்ளாதீர்கள், சட்ட ரீதியாகத் தொடர்ந்து கடுமையாகப் போராடுங்கள் என்று அவர் டிரம்ப்பை வலியுறுத்தியுள்ளார். தேர்தல் முடிவு தொடர்பாக டிரம்ப் தொடர்ந்து போராட விரும்புவதாக, அவரது பொருளாதார ஆலோசகர் லாரி  குட்லோவும் கூறியுள்ளார்.

டிரம்ப்பின் மகன்கள், அவரது மூத்த ஆலோசகரும் மருமகனுமான ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் தொடர்ந்து போராடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், டிரம்ப் தனது தோல்வியை இப்போதைக்கு முறையாக ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும், ஆனால் பதவிக் கால முடிவில் வெள்ளை மாளிகையைவிட்டு அவர் வெளியேற வாய்ப்பு உள்ளது என்றும் அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்துள்ளனர். 

அவருடைய தற்போதைய முயற்சிகள், அவர் இன்னும் போராடுகிறார் என அவரது விசுவாசிகளுக்கு உணர்த்துவதற்கான நடவடிக்கையாக இருக்கலாம் என்றும், அடுத்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அவர்களை உற்சாகப்படுத்துவதற்கு இது முக்கியக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் புதிய அதிபர் வரும் ஜனவரி 20-ஆம் தேதி முறைப்படி பதவியேற்பார். அதுவரை, டிரம்ப் பொறுப்பு வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT