பிரணாப்பிற்கு சிறப்பு இரங்கல் கூட்டம் நடத்த முடிவு: வங்கதேசம்
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவையொட்டி வரும் புதன் கிழமை தில்லியில் சிறப்பு இரங்கல் கூட்டம் நடத்த வங்கதேச உயர்மட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவையொட்டி வரும் புதன் கிழமை தில்லியில் சிறப்பு இரங்கல் கூட்டம் நடத்த வங்கதேச உயர்மட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (திங்கள் கிழமை) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்த நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இரங்கல் தெரிவித்தார்.
மேலும் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
ஆசியாவின் மிக மதிப்புமிக்க தலைவரும், இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞரும், மூத்த அரசியல்வாதியுமான பிரணாப் முகர்ஜி, அனைவரது மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவர். நாட்டு மக்களுடைய நலத்தின் மீது அக்கறை கொண்டு செயல்படும் அவரது அயராதபணி, இளைய தலைமுறையினரை வெகுவாக கவரும். இந்தியாவில் மட்டுமல்லாது மற்ற நாட்டினரையும் அவரது பணி கவரக்கூடியது என்று தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரில் மதிப்புமிக்க பங்காற்றியதற்காக கடந்த 2013-ஆம் ஆண்டு வங்கதேச அரசு சார்பில் பிரணாப் முகர்ஜிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இதனிடையே அவரது மறைவையொட்டி தில்லியில் சிறப்பு இரங்கல் கூட்டம் நடைபெறும் என்றும் வங்கதேச உயர்மட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.