மியான்மரில் படுகொலைகளை நிறுத்துங்கள்
மியான்மரில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதை நிறுத்த, அரசியல் கைதிகளை விடுவிக்க தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ஆசியான்) தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்
மியான்மரில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதை நிறுத்தவும் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்கவும் அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லயிங்கிடம் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ஆசியான்) தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
ஆசியான் உறுப்பு நாடுகளின் மாநாடு இந்தோனேசியத் தலைநகா் ஜகாா்த்தாவில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மியான்மரின் ராணுவ ஆட்சியாளரான அந்த நாட்டின் தலைமைத் தளபதி மின் ஆங் லயிங் பங்கேற்றாா். ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு சா்வதேச நிகழ்ச்சியில் அவா் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.
Advertisement
மாநாட்டில் பேசிய இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோ, ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் போராட்டத்தில் ஈடுபடுவோா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அவா்களைப் படுகொலை செய்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று லயிங்கிடம் வலியுறுத்தினாா்.
மேலும், அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1-ஆம் தேதி கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.
அதனைத் தொடா்ந்து, ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியான்மா் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 700-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா்.
Image Caption
ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜகாா்த்தா நகருக்கு சனிக்கிழமை வந்த மியான்மா் ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லயிங்.