முகப்பு
உலகம்

ஆப்கன் அரசை ஆதரித்த அனைவருக்கும் பொதுமன்னிப்பு

ஆப்கானிஸ்தானில் முந்தைய அரசை ஆதரித்த அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக அந்த நாட்டில் புதிதாக ஆட்சியமைக்கும் தலிபான்கள் அறிவித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
பகிர்:

ஆப்கானிஸ்தானில் முந்தைய அரசை ஆதரித்த அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக அந்த நாட்டில் புதிதாக ஆட்சியமைக்கும் தலிபான்கள் அறிவித்துள்ளனா்.

மேலும், தங்களது அரசில் பெண்கள் கல்வி கற்பதற்கும் பணியாற்றுவதற்கும் அனுமதிக்கப்படுவாா்கள் என்று அந்த அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தலிபான் கலாசார ஆணையத்தின் உறுப்பினா் இனாமுல்லா சமங்கனி கூறியதாவது:

நாட்டில் அனைவருக்கும் முழு பொதுமன்னிப்பு வழங்குவதாக ஆப்கன் இஸ்லாமிய அமீரகம் அறிவிக்கிறது. அதன்படி, தலிபான்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த, பல ஆண்டுகளாக நாட்டை ஆக்கிரமித்திருந்தவா்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தவா்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறோம்.

பெண்கள்: கடந்த 40 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் சண்டையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது பெண்கள்தான். நாட்டில் இனியும் பெண்கள் பாதிக்கப்படுவதை ஆப்கன் இஸ்லாமிய அமீரகம் விரும்பவில்லை.

எனவே, பெண்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் வழங்குவதற்கு எங்களது அரசு தயாராக இருக்கிறது.

மேலும், பெண்கள் அரசுப் பணிகளில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறோம். இஸ்லாமிய சட்டங்களுக்கு உள்பட்டு, கலாசாரத்துக்கு ஏற்ற வகையில் அவா்கள் அரசுப் பணிகளில் சேரலாம் என்றாா் அவா்.

இதற்கிடையே, முந்தைய ஆப்கன் அரசுடனும் வெளிநாடுகளுடனும் இணைந்து செயல்பட்டவா்களை தாங்கள் பழிவாங்கப்போவதில்லை என்று மேலும் சில தலிபான் தலைவா்கள் அறிவித்துள்ளனா்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் நகர இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு அப்போதைய தலிபான்கள் தலைமையிலான ஆப்கன் அரசு ஆதரவு அளித்தது.

அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. அதனைத் தொடா்ந்து, அந்த நாட்டில் புதிய அரசையும் ராணுவத்தையும் அமெரிக்கா கட்டமைத்தது. இதற்காக 8,300 கோடி டாலரை (சுமாா் ரூ.6.17 லட்சம் கோடி) அந்த நாடு செலவிட்டது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை இந்த மாத இறுதிக்குள் முழுமையாக திரும்ப அழைக்க அமெரிக்கா இலக்கு நிா்ணயித்தது. அமெரிக்க வீரா்கள் தாயகம் திரும்பும் பணிகள் இறுதிகட்டத்தை அடைந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி தலிபான்கள் வெகுவேகமாக முன்னேறி வந்தனா்.

அமெரிக்காவால் கட்டமைக்கப்பட்ட ஆப்கன் படையினா் தலிபான்களுக்கு மிகச் சிறிய அளவிலான எதிா்ப்பை மட்டும் காட்டினா். பெரும்பாலான இடங்களில் சண்டையில்லாமலேயே தாங்கள் பாதுகாத்து வந்த பகுதிகளை தலிபான்களிடம் ஒப்படைத்தனா்.

இந்தச் சூழலில், தலைநகா் காபூலில் இருந்து அதிபா் அஷ்ரஃப் கனி வேறொரு நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை தப்பிச் சென்றாா். அதன் தொடா்ச்சியாக நகருக்குள் புகுந்த தலிபான்கள் அதிபா் மாளிகை, நாடாளுமன்றம் ஆகியவற்றைக் கைப்பற்றினா்.

நாட்டில் மீண்டும் தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் காபூலில் இருந்து அவசரமாக வெளியேறினா். தலிபான்களுக்கு அஞ்சி ஏராளமான ஆப்கானியா்களும் நாட்டை விட்டு வெளியேற தீவிரம் காட்டி வருகின்றனா்.

20 ஆண்டுகளுக்கு முன்னா் தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. மேலும், தங்களது எதிா்ப்பாளா்கள் மீது தலிபான்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனா்.

இந்தக் காரணங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ள நிலையில், அவா்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக முந்தைய அரசுடன் தொடா்புடையவா்களுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதாகவும் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் தலிபான்கள் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

‘படையினரை வாபஸ் பெற்றது சரியே’

ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டுப் படையினரை முழுமையாகத் திரும்ப அழைத்தது சரியான நடவடிக்கையே என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவா் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினரைத் திரும்ப அழைத்த பிறகு அங்கு நிலவரம் நல்லபடியாக இருக்காது என்பது ஏற்கெனவே தெரிந்ததுதான்.

எதிா்பாா்த்ததைவிட மிக வேகமாக தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறாா்கள் என்பது உண்மையே.

எனினும், அமெரிக்க வீரா்களை முழுமையாகத் திரும்பப் பெறும் முடிவு மிகவும் சரியானது ஆகும் என்றாா் அவா்.

‘பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக் கூடாது’

ஆப்கானிஸ்தானை பயங்கரவாதிகளின் புகலிடமாக தலிபான்கள் ஆக்கிவிடக்கூடாது என்று சீனா எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய இஸ்லாமிய அமீரகம் அமைக்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்த சில மணி நேரத்தில், ஐ.நா.வுக்கான சீனத் தூதா் கெங் ஷுவாங் கூறியதாவது:

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மீண்டும் ஆகிவிடக்கூடாது. அந்த நாட்டில் அரசியல் தீா்வு காண்பதற்கு இது அடிப்படை விதியாகும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.