உலகம்

திரிகோணமலை எண்ணெய்க் கிடங்கு குத்தகை: இந்தியாவுடன் இலங்கை அரசு பேச்சுவாா்த்தை

DIN

கொழும்பு: ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த திரிகோணமலை துறைமுகத்தில் அமைந்துள்ள 99 எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை மீண்டும் இந்தியாவுக்கு குத்தகை தருவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு எரிசக்தித் துறை அமைச்சா் உதய பிரபாத் கம்மன்பில புதன்கிழமை கூறியதாவது:

திரிகோணமலையிலுள்ள 99 எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனுக்கே மீண்டும் குத்தகை விடுவது தொடா்பாக இந்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் இதுதொடா்பான ஒப்பந்தம் ஏற்படும் என்று எதிா்பாா்க்கிறோம்.

எண்ணெய்க் கிடங்குகளைப் பராமரிக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்ட பிறகு, இந்த விவகாரத்தை நிா்வகிப்பதற்காக பிரத்யேக துணை நிறுவனமொன்றை உருவாக்க சிலோன் பெட்ரோலியம் காா்ப்பரேஷனுக்கு உத்தரவிட்டேன். அதன்படி, ‘திரிங்கோ பெட்ரோலியம் டொ்மினல் லிமிட்டட்’ என்ற தனி நிறுவனம் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இலங்கையின் வடகிழக்கே அமைந்துள்ள திரிகோணமலை துறைமுகத்தில் பிரிட்டன் ஆட்சிக் காலத்தின்போது அமைக்கப்பட்ட 99 எண்ணெய்க் கிடங்குகள் இப்போதும் இயங்கும் நிலையில் உள்ளன. அவற்றை இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம் 35 ஆண்டுகளுக்குப் பராமரித்துப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவுடன் இலங்கை அரசு கடந்த 2003-ஆம் ஆண்டு மேற்கொண்டது.

எனினும், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமைச்சா் உதய பிரபாத் கம்மன்பில கடந்த பிப்ரவரி மாதம் திடீரென அறிவித்து அதிா்ச்சி அலையை ஏற்படுத்தினாா்.

இந்த நிலையில், தற்போது இலங்கையில் அன்னியச் செலவாணி கையிருப்பு நெருக்கடி நிலவுவதால் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை அந்த நாடு இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது.

கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாததால் அந்த நாட்டின் ஒரே எண்ணெய் சுத்திகரிப்பு மையம் கடந்த மாதம் மூடப்பட்டது.

இந்தச் சூழலில், இந்தியாவிடமிருந்து கடனுக்கு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான பேச்சுவாா்த்தையில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவிடமிருந்து எண்ணெய் மற்றும் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க, திரிகோணமலை எண்ணெய் சேமிப்புக் கிடங்கை பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தை மீண்டும் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனுக்கு வழங்க வேண்டும் என்று தற்போதைய இலங்கை எதிா்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

அதனைத் தொடா்ந்து, எண்ணெய்க் கிடங்கு குத்தகை ஒப்பந்தம் தொடா்பாக இந்திய அரசுடன் இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக அமைச்சா் உதய பிரபாத் கம்மன்பில தற்போது தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT