காத்மாண்டு: நேபாளத்தில் நாடாளுமன்றக் கீழவையைக் கலைக்கும் அரசின் நடவடிக்கை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், பிரதமர் கே.பி. சர்மா ஓலி உடனடியாக ராஜிநாமா செய்யும் மனநிலையில் இல்லை என்றும், அவர் நாடாளுமன்றத்தை எதிர்கொள்வார் என்றும் அவரது ஊடக ஆலோசகர் புதன்கிழமை தெரிவித்தார்.
நேபாள நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, முன்கூட்டியே தேர்தலை நடத்துவதென, பிரதமர் சர்மா ஓலி தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் கூடிய அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என அறிவித்தது. அரசின் முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என நீதிபதிகள் குறிப்பிட்டதுடன், கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத்தை 13 நாள்களுக்குள் கூட்ட வேண்டும் என அரசுக்கு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் சர்மா ஓலியின் ஊடக ஆலோசகர் சூர்யா தாபா கூறுகையில், "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சர்ச்சைக்குரியது. எனினும், அதை ஏற்று, செயல்படுத்தவேண்டும். இந்தத் தீர்ப்பு அரசியல் பிரச்னைகளுக்கு எந்தத் தீர்வையும் வழங்காததால் எதிர்காலத்தில்தான் அதன் விளைவுகள் தெரியவரும். உறுதியற்ற தன்மையையும், அதிகாரப்போக்கையும் மேலும் தூண்டவே இத்தீர்ப்பு வழிவகுக்கும். பிரதமர் உடனடியாக ராஜிநாமா செய்யும் மனநிலையில் இல்லை' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.