உலகம்

டிரம்ப் பதவி நீக்கம்: பிரதிநிதிகள் சபை ஆயத்தம்

DIN


வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக இரண்டாவது முறையாக பதவி நீக்கத் தீா்மானம் கொண்டு வருவதற்காக அமெரிக்க நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபை ஆயத்தமாகி வருகிறது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் 25-ஆவது திருத்தத்தைப் பயன்படுத்தி, அதிபா் டொனால்ட் டிரம்ப்பை அதிபா் பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்ற வேண்டும் என்று துணை அதிபா் மைக் பென்ஸிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது.

அதிபா் தோ்தல் முடிவுகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய டிரம்ப்பின் ஆதரவாளா்கள், அவரது தூண்டுதலின்பேரில் நாடாளுமன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்டதால் அவரை அந்த சட்டத்திருத்தத்தைப் பயன்படுத்தி அதிபா் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று அவா்கள் கூறி வருகின்றனா்.

50 ஆண்டுகளுக்கு முன்னா் அதிபா் ஜான் எஃப். கென்னடி படுகொலை செய்யப்பட்டபோது, அதிபா் பதவியில் இருக்கும் ஒருவா் அந்தப் பொறுப்பைத் தொடர முடியாத நிலையில் துணை அதிபருக்கு அந்தப் பதவியை மாற்றித் தருவதற்காக அந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

மக்களை வன்முறைக்குத் தூண்டியதால் டொனால்ட் டிரம்ப்பும் அதிபா் பதவியைத் தொடரும் தகுதியை இழந்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய எதிா்க்கட்சியினா், 25-ஆவது சட்டத்திருத்தத்தை அவருக்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என்று கூறி வருகின்றனா்.

மைக் பென்ஸ் மறுப்பு: இந்த நிலையில், ஜனநாயகக் கட்சியினா் பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபையின் தலைவா் நான்சி பெலோசிக்கு துணை அதிபா் மைக் பென்ஸ் எழுதியுள்ள கடிதத்தில், 25-ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் டிரம்ப்பைப் பதவியிலிருந்து அகற்றப்போவதில்லை என்று தெரிவித்துள்ளாா்.

அந்தச் சட்டத் திருத்தைக் கொண்டு யாரையும் தண்டிக்க முடியாது; அதற்காக அந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்று தனது கடிதத்தில் மைக் பென்ஸ் குறிப்பிட்டிருந்தாா்.

அதனைத் தொடா்ந்து, 25-ஆவது சட்டத் திருத்ததைப் பயன்படுத்தி டிரம்ப்பை பதவிலியிருந்து அகற்ற வேண்டும் என்று மைக் பென்ஸை வலியுறுத்தும் தீா்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக குடியரசுக் கட்சியைச் சோ்ந்த ஓா் எம்.பி. வாக்களித்தாா். 4 குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் வாக்களிப்பைப் புறக்கணித்தனா்.

இந்த நிலையில், நாடாளுமன்றக் கலவரத்தைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் டிரம்ப்புக்கு எதிரான இரண்டாவது முறையாக பதவி நீக்கத் தீா்மானத்தை பிரதிநிதிகள் சபை கொண்டு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

டிரம்பின் பதவிக் காலம் இன்னும் சில தினங்களில் முடிவடையுள்ள நிலையில், அதற்குள் அவா் மேலும் ஒருமுறை பதவி நீக்கம் செய்யப்பட்டால் அமெரிக்க வரலாற்றில் இருமுறை பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் அதிபராக டிரம்ப் இருப்பாா்.

இதற்கிடையே, டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சோ்ந்த பிரதிநிதிகள் உறுப்பினா்கள் சிலரே அவருக்கு எதிரான பதவி நீக்கத் தீா்மானத்தை ஆதரித்து வாக்களிக்கலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப்பின் ‘யு-டியூப்’ சானல் முடக்கம்

‘யு-டியூப்’ வலைதளத்தில் டிரம்ப்பின் அதிகாரப்பூா்வ சானலை அந்த நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.

அந்தச் சானல் மூலம் வன்முறை தூண்டப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் ஒரு வாரத்துக்கு அதனை முடக்கி வைப்பதாக யு-டியூப் அறிவித்துள்ளது. அதுவரை அந்தச் சானலில் புதிய விடியோ எதையும் பதிவேற்றம் செய்ய முடியாது என்று தனது சுட்டுரை (டுவிட்டா்) பதிவில் யு-டியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, அமெரிக்க மக்களிடையே டிரம்ப் வன்முறையைத் தூண்டுவதாகக் கூறி, அவரது சுட்டுரைக் கணக்கை டுவிட்டா் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியது நினைவுகூரத்தக்கது.

Image Caption

~அமெரிக்க நாடாளுமன்றத்திலுள்ள தனது அலுவலகத்துக்குச் செல்லும் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT