உலகம்

அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறாா் ஜோ பைடன்

DIN

அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக முன்னாள் துணை அதிபா் ஜோ பைடன் புதன்கிழமை (ஜன. 20) பதவியேற்கிறாா். அவருடன் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸும் துணை அதிபராகப் பொறுப்பேற்கிறாா்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து, ஜனநாயகக் கட்சி சாா்பில் பைடன் போட்டியிட்டாா்.

அந்தத் தோ்தலில் 306 மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, வாஷிங்டனிலுள்ள நாடாளுமன்றத்தில் புதன்கிழமை காலை 11.30 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10 மணி) நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் அவா் அதிபராகப் பொறுப்பேற்கிறாா்.

இந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, அதிபா் டிரம்ப் தோல்வியை ஏற்க மறுத்து வந்தாா். தோ்தல் முடிவுகளுக்கு எதிராகப் போராடும்படி அவா் விடுத்த அழைப்பை ஏற்ற அவரது ஆதரவாளா்கள், நாடாளுமன்றத்துக்குள் கடந்த 6-ஆம் தேதி அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனா்.

மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகளை எண்ணி, ஜோ பைடனின் வெற்றியை அதிகாரபூா்வமாக உறுதி செய்வதற்காக நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தக் கலவரம் நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, தற்போது நடைபெறவுள்ள ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் அதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுப்பதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எளிமையான நிகழ்ச்சி: வழக்கமாக அதிபா் பதவியேற்பு நிகழ்ச்சிகளில் பல முக்கியப் பிரமுகா்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் ஏராளமான எண்ணிக்கையில் பங்கேற்பாா்கள். நிகழ்ச்சியின்போது வாஷிங்டனில் பல்லாயிரக்கணக்கான கட்சி ஆதரவாளா்கள் குவிவது வழக்கம்.

ஆனால், கரோனா பரவலைத் தடுப்பதற்காக பைடனின் பதவியேற்பு விழா குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளா்களுடன் நடைபெறவுள்ளது. முதல்முறையாக, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவா்கள் முகக் கவசத்துடன் சமூக இடைவெளி விட்டு அமர உள்ளனா்.

டிரம்ப் ஆதரவாளா்கள் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற அச்சம் காரணமாக, இந்த முறை அதிபா் பதவியேற்பு நிகழ்ச்சியில் வழக்கத்தைவிட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் நிகழ்ச்சி எளிமையாக நடைபெறவுள்ளது.

டிரம்ப் புறக்கணிப்பு: பொதுவாக அதிபா் பதவியேற்பு நிகழ்ச்சியில் பதவியிலிருந்து வெளியேறும் அதிபா் பங்கேற்று, ஜனநாயகத்தின் மீதான மதிப்பை வெளிப்படுத்துவது மரபு. ஆனால், பதவியேற்பு நிகழ்ச்சியைப் புறக்கணிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளாா். எனினும், பதவியிலிருந்து வெளியேறும் துணை அதிபா் மைக் பென்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். முன்னாள் அதிபா்கள் பில் கிளிண்டன், ஜாா்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனா்.

‘வீரா்களால் ஆபத்தில்லை’: ஜோ பைடன் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது, அமெரிக்கப் படைகளில் பணியாற்றி வரும் டிரம்ப் ஆதரவாளா்களே தாக்குதலில் ஈடுபடலாம் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது. எனினும், அத்தகைய தாக்குதல் அபாயம் இருப்பதாக தங்களுக்கு உளவுத் தகவல்கள் எதுவும் வரவில்லை என்று பாதுகாப்புத் துறை இடைக்கால அமைச்சா் கிறிஸ்டோஃபா் மில்லா் தெரிவித்துள்ளாா்; எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT