பெகாசஸ் உளவு விவகாரம்: செல்போனை மாற்றிய பிரான்ஸ் அதிபர்
பெகாசஸ் மென்பொருள் மூலம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உளவு பார்க்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் அவர் தனது செல்போனை மாற்றியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெகாசஸ் மென்பொருள் மூலம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உளவு பார்க்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் அவர் தனது செல்போனை மாற்றியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
இராக் அதிபர் பர்ஹம் சாலி, தென்னாப்பிரிக்க அதிபர் சைரில் ராமோஃபோசா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எகிப்து பிரதமர் முஸ்தபா மட்பெளலி, மொராக்கோ பிரதமர் சாத் எட்டின் எல் அத்மானி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பலரும் உளவு பார்க்கப்பட்டதாக சர்வதேச பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது செல்போனை மாற்றியுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிபர் பல்வேறு எண்களைப் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள அவர்கள் இதனை உளவு விவகாரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளனர்.
முன்னதாக பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்ட மேக்ரான் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் தனிச் செயலாளர்களின் எண்கள் வேவு பார்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.