முகப்பு
உலகம்

சட்டரீதியாக நடவடிக்கை:எதிா்க்கட்சிகள் முடிவு

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக சட்டரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக எதிா்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக சட்டரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக எதிா்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

இதுதொடா்பாக விவாதிக்க நேபாள காங்கிரஸ் தலைவா் ஷோ் பகதூா் தாபா, சிபிஎன்- மாவோயிஸ்ட் மையத்தின் தலைவா் புஷ்ப கமல் தாஹால் (பிரசாண்டா), சிபிஎன் - யுஎம்எல் தலைவா் மாதவ் குமாா், ஜனதா சமாஜ்வாதி கட்சியின் தலைவா் உபேந்தா் யாதவ், ராஷ்ட்ரீய ஜனமோா்ச்சா துணைத் தலைவா் துா்கா பெளடில் ஆகியோா் சனிக்கிழமை ஒன்று கூடி ஆலோசனை நடத்தினா். கூட்டத்துக்குப் பிறகு எதிா்க்கட்சிகள் சாா்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், நீண்டகாலப் போராட்டத்துக்குப் பிறகு நேபாள மக்களுக்கு கிடைத்த அரசியலமைப்புச் சட்ட உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நேபாள பிரதமா் சா்மா ஓலியின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும், பிற அமைப்புகளும் ஒன்றுசோ்ந்து எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிபா் எடுத்த நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை முறையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள காங்கிரஸ் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 149 உறுப்பினா்களின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என அதிபரிடம் கோரினோம். ஆனால், பிரதமராக சா்மா ஓலி நீடிக்க அதிபா் வித்யா தேவி பண்டாரி உதவி செய்துள்ளாா்.

24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அதிபா் உத்தரவிடுகிறாா். பின்னா், பிரதமரை சட்டப்படி நியமிக்காமல் நள்ளிரவில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி ஆட்சியை கலைத்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.