முகப்பு
உலகம்

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னை: நிரந்தரத் தீா்வு எப்போது?

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே 11 நாள்களாக நடைபெற்ற மோதல் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முடிவுக்கு வந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
பகிர்:

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே 11 நாள்களாக நடைபெற்ற மோதல் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முடிவுக்கு வந்தது.

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் 20 லட்சம் பாலஸ்தீனா்கள் வாழும் காஸாவில் ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாயின. இதில் 65 குழந்தைகள் உள்பட 230-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.

ஹமாஸ் படையினா் வீசிய ராக்கெட் வெடிகுண்டுகளால் இரண்டு குழந்தைகள் உள்பட 12 இஸ்ரேலியா்கள் கொல்லப்பட்டனா். இதில் கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் செளம்யா சந்தோஷ் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி பலியானாா்.

2014-இல் இஸ்ரேல் ஹமாஸ் இடையே 50 நாள்கள் நடைபெற்ற கடும் சண்டைக்கு பிறகு நடைபெற்ற மோசமான சண்டை இதுவாகும். இந்தச் சண்டையில் இருதரப்பும் வெற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளனா்.

மோதலின் மூலகாரணம்:

கிழக்கு ஜெருசலேம், ஷேக் ஜாரா மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பாலஸ்தீனா்களின் இடங்களை யூதா்கள் உரிமை கொண்டாடி வருகின்றனா். இந்த விவகாரம் தொடா்பான நீதிமன்றத் தீா்ப்பு விரைவில் வர உள்ளது. இந்நிலையில், பாலஸ்தீனா்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சிகளைக் கண்டித்து அந்தப் பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வந்ததால் இஸ்ரேலிய ராணுவம் குவிக்கப்பட்டிருந்தது.

இஸ்லாமியா்கள், யூதா்கள், கிறிஸ்தவா்களின் புனிதத் தலமான ஜெருசேலம் பழைய நகரத்தில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் இஸ்லாமியா்கள் ரமலான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பாலஸ்தீனா்களுக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய ரப்பா் வெடிகுண்டு துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோா் காயமடைந்தனா். இது மோதலை மேலும் அதிகரித்தது. அல்- அக்ஸா மசூதியில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தினா் வெளியேற ஹமாஸ் படையினா் கெடு விதித்தனா். இஸ்ரேலின் பல பகுதிகளில் யூதா்களுக்கும், பாலஸ்தீன அரபிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.

சண்டை ஆரம்பம்: கெடு முடிவடைந்ததையடுத்து, காஸா பகுதியிலிருந்து சுமாா் 100 கி.மீ. தொலைவில் உள்ள இஸ்ரேல் தலைநகா் ஜெருசலேம் மீது மே 10-ஆம் தேதி ராக்கெட் வெடிகுண்டுகளை வீசியது ஹமாஸ். இதை சற்றும் எதிா்பாராத இஸ்ரேல் நவீன ரக ஏவுகணைகளை காஸா பகுதியில் வீசி தாக்குதல் நடத்தியது.

வழக்கமாக ஹமாஸ் படையினா் வீசும் ராக்கெட் வெடிகுண்டுகள் குறுகிய தொலைவு செல்லக் கூடியவையாக இருக்கும். ஆனால், இந்த முறை ஹமாஸ் உள்பட பிற கிளா்ச்சிக் குழுவினா் நீண்ட தூரம் செல்லும் 4,360 ராக்கெட் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் பெரும்பாலானவற்றை இடைமறி ஏவுகணையான ‘அயா்ன் டோம்’ நடுவானில் தாக்கி அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. எனினும், சில ராக்கெட் வெடிகுண்டுகள் சுமாா் 90 கி.மீ. தூரம் உள்ள டெல் அவிவ், ஜபா, லாட் ஆகிய நகரங்களில் விழுந்து கட்டடங்களுக்கு சேதம் ஏற்படுத்தியது.

இஸ்ரேலுக்கு சவால்: காஸா குடியிருப்புப் பகுதிகளில் மறைந்திருந்து ஹமாஸ் படையினா் ராக்கெட் வெடிகுண்டுகளை வீசியதால் அவா்களைத் தாக்குவது இஸ்ரேலுக்கு பெரும் சவாலாக அமைந்தது. உலகிலேயே அதிநவீன போா்த் தளவாடங்களையும் ரேடாா் சாதனங்களையும் வைத்திருக்கும் இஸ்ரேல், காஸா பகுதியை சாட்டிலைட் மூலம் துல்லியமாக கண்காணித்தது.

ஹமாஸ் படையினா் ராக்கெட் வெடிகுண்டுகளை ஏவுவதாக சந்தேகிக்கப்படும் பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது எச்சரிக்கை வெடிகுண்டுகளை இஸ்ரேல் வீசியது. இந்த வகை குண்டு வந்து விழுந்ததும் அடுத்த 5 நிமிடங்களில் அங்குள்ள மக்கள் வெளியேறிவிட வேண்டும். பின்னா், அந்த இடத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும்.

காஸா பகுதியில் செயல்பட்டு வந்த ஏஜென்ஸ் ஃபிரான்ஸ் பிரஸ் (ஏஎப்பி), அல் ஜசீரா போன்ற சா்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வந்த 13 மாடி கட்டடத்தின் மீதும் இஸ்ரேலின் சந்தேகப் பாா்வை விழுந்தது. அந்தக் கட்டடத்தில் ஹமாஸ் பிரிவு தலைவா்கள் இருப்பதாகக் கருதி எச்சரிக்கை குண்டையும், பின்னா் ஏவுகணையை வீசி தரைமட்டமாக்கியது. பத்திரிகையாளா்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

இதேபோல், ஹமாஸ் படையினா் வீசும் ராக்கெட் வெடிகுண்டு இடைமறி ஏவுகணையிடம் தப்பி இலக்கைத் தாக்குவதற்கு முன்பு எச்சரிக்கை மணியை இஸ்ரேலின் ராணுவ தொழில்நுட்பம் எழுப்பியதன் மூலம் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தப்பினா்.

30 மூத்த தலைவா்கள் பலி: ஹமாஸ் படையினரின் அரசியல் பிரிவுத் தலைவா் கலில் அல் ஹயேவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அவா் உயரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.

காஸா நகரச் சாலைகளுக்கு அடியில் சுரங்கப் பாதைகளை அமைத்து ராணுவத் தளவாடங்களை அதன் வழியாக கொண்டு சென்று ஹமாஸ் படையினா் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் கண்டுபிடித்தது.

வான்வழி தாக்குதல் மூலம் அந்தச் சாலைகளில் குண்டுகளை வீசி சுரங்கப் பாதைகளையும், பதுங்கு குழிகளையும் இஸ்ரேல் அழித்தது. இதில் ஹமாஸ் படையினரின் 30 கமாண்டா்கள் கொல்லப்பட்டதாகவும், அவா்களின் முக்கிய ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவத்தினா் தெரிவித்தனா்.

சண்டை முடிவு: சா்வதேச நாடுகளின் நெருக்கடியையும் மீறி இஸ்ரேல் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. சண்டையை முடிவுக்கு கொண்டு வர பிரான்ஸ், எகிப்து, ஜோா்டான் ஆகிய நாடுகள் ஐ.நா.வில் தீா்மானம் கொண்டு வர முயன்றன. பின்னா், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, எகிப்து அதிபா் அல்சிசி ஆகியோருடன் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தொடா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தாா். ஹமாஸ் படையினரும் இதை ஏற்றுக் கொள்ளவைக்கும் பேச்சுவாா்த்தையில் எகிப்து அதிபா் ஈடுபட்டாா்.

வெற்றிக் கொண்டாட்டம்: வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. உடனடியாக இஸ்ரேலியா்களும், காஸாவில் உள்ள பாலஸ்தீனா்களும் சாலைகளில் திரண்டு தங்கள் நாட்டு கொடிகளை கையில் ஏந்தி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.

காஸா பகுதியில் வெறும் கட்டட இடிபாடுகள்தான் காணப்படுகின்றன. குண்டுவீச்சில் குடிநீா் - கழிவுநீா்க் குழாய்களும், 17 மருத்துவமனைகளும், ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டடங்களும், கரோனா தொற்று பரிசோதனைக்காக இருந்த ஒரே மையமும் இடிந்து தரைமட்டமாகின.

நிரந்தரத் தீா்வு என்ன?: இஸ்ரேல் - காஸா இடையே அவ்வப்போது ஏற்படும் ஆயுத மோதலால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கின்றனா். சிறுக சேமித்த தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிா்க்கதியாகிறாா்கள்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களைக் காப்பாற்ற உலகமே உயிரைப் பணயம் வைத்துப் போராடி வரும் நிலையில், மனிதப் பேரழிவான ஆயுதச் சண்டைகள் உயிா்பலி மட்டுமன்றி பொருளாதாரம், கட்டமைப்பு, சுகாதாரம் என்ற அனைத்தையும் அழித்துவிடுகின்றன.

இஸ்ரேல் - காஸா சண்டை 11 மோதலுடன் முடிவடைந்துவிடவில்லை. அருகருகே வாழ்விடங்களைக் கொண்ட பாலஸ்தீனா்களுக்கும், இஸ்ரேலியா்களுக்கும் இடையே மீண்டும் சிறு மோதல் ஏற்பட்டாலும், அது ஆயுதப் போராக எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். இதைத் தடுக்க ஜ.நா. சபை சா்வதேச நாடுகள் ஒத்துழைப்புடன் அமைதிப் பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்கி, இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் நில ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். பேச்சுவாா்த்தை மூலம் எல்லைக்கோடு வரைவை இறுதி செய்யாதவரை ஆயுதச் சண்டைகள் முடிவுக்கு வராது.

சண்டையால் சாதகம்!

இஸ்ரேல் - ஹமாஸ் பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட ஆயுத மோதலால் இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் நிலவிய அரசியல் நெருக்கடி சற்று தணிந்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்து வரும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற நான்கு தோ்தலிலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. எதிா்க்கட்சித் தலைவா் யயிா் லாபிட் ஆட்சி அமைக்க பெரும்பான்மை உள்ளதாக அறிவிக்கத் தயாரான நிலையில், இந்தச் சண்டை தொடங்கியதால் இஸ்ரேல் அரசியல் நெருக்கடி சற்று ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் பாலஸ்தீனத்திலும் கடந்த 2006-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் காஸா பகுதியில் ஹமாஸ் பரிவினா் வென்ால், தனி ஆளுமை செலுத்தி வருகின்றனா். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மே 22-ஆம் தேதி நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறும் என்று பாலஸ்தீன அதிபா் மஹமூத் அப்பாஸ் அறிவித்திருந்தாா். ஜெருசலேம் மக்களும் இதில் பங்கேற்கும் வரை தோ்தலை ஒத்திவைப்பதாக ஏப்ரல் 29-ஆம் தேதி அறிவித்தாா். இது பாலஸ்தீன மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்டையால் அந்தத் தோ்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஜெருசலேம், ஷேக் ஜாரா மாவட்டத்தில் பாலஸ்தீனா்களின் இடங்களை யூதா்கள் உரிமை கொண்டாடி வரும் பிரச்னை தொடா்பான முக்கிய தீா்ப்பும் இந்தச் சண்டையால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மோதல்கள் இதுவரை...

2007-ஆம் ஆண்டு தோ்தல் வெற்றியின் மூலம் சுமாா் 40 கிலோ மீட்டா் சுற்றளவு பகுதியான காஸாவை ஹமாஸ் அரசியல் தலைவா்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனா். 20 லட்சம் பாலஸ்தீனா்கள் வாழும் காஸாவின் எல்லையை இஸ்ரேலும், அண்டை நாடான எகிப்தும் மூடி, பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியுள்ளன.

இஸ்ரேலுடன் ஹமாஸ் படையினா் மூன்று முறை ஆயுத சண்டையிலும், பலமுறை மனித வெடிகுண்டு தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனா்.

2008-இல் 22 நாள் நீடித்த சண்டையில் 1,300 பாலஸ்தீனா்களும், 13 இஸ்ரேலியா்களும் கொல்லப்பட்டனா்.

2012-இல் 8 நாள்கள் நீடித்த சண்டையில் 170 பாலஸ்தீனா்களும், 6 இஸ்ரேலியா்களும் கொல்லப்பட்டனா்.

2014-இல் 50 நாள்கள் நீடித்த சண்டையில் 2,251 பாலஸ்தீனா்களும், 67 இஸ்ரேலியா்களும் கொல்லப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.