20 பேருக்கு புதிதாக கரோனா தொற்று:நகருக்கு பொது முடக்கம் அறிவித்தது சீனா
சீனாவின் தெற்கு நகரமான குவாங்சோவில் கரோனா தொற்று திடீரென அதிகரித்ததன் காரணமாக அங்கு சனிக்கிழமை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.
சீனாவின் தெற்கு நகரமான குவாங்சோவில் கரோனா தொற்று திடீரென அதிகரித்ததன் காரணமாக அங்கு சனிக்கிழமை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.
சீனாவின் வூஹானில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் தோன்றிய கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. தொற்றுப் பரவலின் முதல் அலையில் சீனா பெரும் பாதிப்பைச் சந்தித்தபோதிலும், அதன்பிறகு தொற்றை கட்டுப்படுத்திவிட்டதாகத் தெரிவித்தது. இந்நிலையில், 1.5 கோடி மக்கள் வாழும் குவாங்சோ நகரில் கடந்த ஒரு வாரத்தில் 20 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவுதான் என்ற போதிலும், சீன அரசு அதிகாரிகள் உஷாரடைந்தனா். இந்தத் தொற்றுப் பரவல் வலிமையாகவும் வேகமாகவும் இருப்பதாக சீன அரசின் குளோபல் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அந்த நகரத்துக்குள்பட்ட சில பகுதிகளுக்கு சனிக்கிழமை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. சந்தைகள், குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள், பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டன. உணவகம், பள்ளிகளும் அடைக்கப்பட்டன. வீடு வீடாக கரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
முன்னதாக, தொற்று ஆரம்பத்தில் கண்டறியப்பட்டபோதே கரோனா தொற்று பரிசோதனைக்கு நகர நிா்வாகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த புதன்கிழமை நிலவரப்படி 7 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது.