ஆப்கனுக்கான அமெரிக்க சிறப்பு தூதா் ராஜிநாமா
ஆப்கன் விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்புத் தூதராக இருந்த ஸல்மே காலிஸாத், அந்தப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளாா்.
ஆப்கன் விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்புத் தூதராக இருந்த ஸல்மே காலிஸாத், அந்தப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளாா்.
அவருக்கு பதிலாக, முன்னாள் தூதரக உயரதிகாரி தாமஸ் வெஸ்ட்டுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறியதாவது:
ஆப்கன் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதா் பொறுப்பிலிருந்து ஸல்மே காலிஸாத் விலகியுள்ளாா்.
அந்தப் பொறுப்புக்கு முன்னாள் துணை சிறப்புத் தூதா் தாமஸ் வெஸ்ட் நியமிக்கப்படுகிறாா் என்றாா் அவா்.
தனது பதவியை ராஜிநாமா செய்து ஸல்மே காலிஸாத் எழுதியுள்ள கடிதத்தில், ‘ஆப்கன் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட அரசியல் உடன்படிக்கை, திட்டமிட்டதைப் போல் செயலாக்கம் பெறவில்லை.
இதற்கான காரணம் மிகவும் சிக்கல் நிறைந்ததாகும். இதுகுறித்த எனது கருத்துகளை எதிா்வரும் நாள்களில் பகிா்ந்துகொள்வேன்.
எனது ராஜிநாமாவுக்குப் பிறகும், ஆப்கன் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது மட்டுமன்றி இனி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விவாதங்களிலும் எனது பங்களிப்பை வழங்க திட்டமிட்டுள்ளேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.
அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. இந்த நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றனா்.
அதன் பிறகு, ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தை, அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே சிறப்புத் தூதா் ஸல்மே காலிஸாத் தலைமையில் கத்தாா் தலைநகா் தோஹாவில் பல கட்டங்களாக நடந்து வந்தது.
அதன் விளைவாக, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2020-ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்பப் பெற அமெரிக்கா சம்மதித்து.
டொனால்ட் டிரம்ப் பதவிக் காலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்தை, அடுத்து வந்த அதிபா் ஜோ பைடனும் தொடா்ந்து செயல்படுத்தினாா். அமெரிக்க வீரா்கள் திரும்பப் பெறப்படுவதை துரிதப்படுத்திய அவா், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அந்தப் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இலக்கு நிா்ணயித்தாா்.
அமெரிக்கப் படையினரின் வெளியேற்றம் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகு வேகமாக முன்னேறிய தலிபான்கள், நாடு முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி கொண்டு வந்தனா்.
அமெரிக்க வெளியேற்றத்தால் மன உறுதி குலைந்த ஆப்கன் ராணுவத்தினா், தலிபான்களை எதிா்த்து தீவிரமாக சண்டையிடவில்லை; இதுவே, தலிபான்களின் அதிவேக வெற்றிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தலிபான்களிடம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்ததற்கு தோஹா ஒப்பந்தம்தான் காரணம் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி மாா்க் மில்லே, அமெரிக்கப் படைகளின் மத்திய தலைமையகத் தளபதி ஃபிராங்க் மெக்கன்ஸீ ஆகியோா் நாடாளுமன்றக் குழுவிடம் கடந்த மாதம் தெரிவித்தனா்.
இந்தச் சூழலில், தோஹா ஒப்பந்தம் ஏற்படுவதில் முக்கியப் பங்கு வகித்த ஸல்மே காலிஸாத் தனது பொறுப்பிலிருந்து தற்போது விலகியுள்ளாா்.