நியூ யார்க்கைப் புரட்டிப் போடும் 'இடா' புயல்: விமான சேவைகள் ரத்து
நியூ யார்க் நகரில் கனமழை காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் அங்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூ யார்க் நகரில் கனமழை காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் அங்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா வட கிழக்கு மாகாணங்களில் 'இடா' புயல் காரணமாக கனமழை பெய்துவருகிறது. இதையடுத்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல்வேறு மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள் மூடப்பட்டு நியூ யார்க் மற்றும் நியூ ஜெர்சியில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மாகாணமான லூசியானாவில் 'இடா' புயல் மற்றும் சூறாவளி காரணமாக தீவிரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாகாணத்தின் வடக்கு பகுதிகள் பெரும் பாதிப்படைந்தன. அமெரிக்காவின் பொருளாதார மற்றும் கலாசார தலைநகராக விளங்கும் நியூ யார்க் நகரின் ஆளுகையின் கீழ் வரும் புரூக்ளின் மற்றும் குயின்ஸ் பகுதி வெள்ளத்தால் சூழ்ந்த நிலையில், அவசர நிலை பிரகடனத்தை நியூ யார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் அறிவித்தார்.
Advertisement
இதுகுறித்து நியூயார்க் நகரத்தின் அவசர அறிவிப்பு அமைப்பு ட்விட்டர் பக்கத்தில், "வீட்டிலேயே இருங்கள். பலத்த காற்றின் காரணமாக சிதைந்த பொருள்கள் பறந்துவந்த மக்களை தாக்க வாய்ப்புள்ளது. முடிந்த அளவுக்கு கீழ் தளங்களில் இருங்கள். ஜன்னல் அருகே நிற்க வேண்டாம்" என பதிவிட்டுள்ளது.
நெவார்க், லாகார்டியா மற்றும் ஜேஎஃப்கே ஆகிய பகுதிகள் அருகே அமைந்துள்ள விமான நிலையங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மன்ஹாட்டன், தி பிராங்க்ஸ் மற்றும் குயின்ஸ் ஆகிய நகரங்களின் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளது.