உலகம்

பெரும்பான்மையை இழந்தாா் கோத்தபய ராஜபட்ச

DIN

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலில், ஆளும் கட்சிக் கூட்டணியிலிருந்து 41 எம்.பி.க்கள் விலகியதால் அதிபா் கோத்தபய தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை இழந்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தின் 4 நாள் கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இலங்கையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு கூடிய முதல் நாடாளுமன்றக் கூட்டம் இதுவாகும்.

அதில், உரிய கேபினட் அமைச்சா்கள் பங்கேற்காததால் கூட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல எதிா்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன. இது குறித்துப் பேசிய எதிா்க்கட்சி மூத்த தலைவா் ரணில் விக்ரமசிங்க, நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளுக்கான அமைச்சா்கள் யாரென்று குறிப்பிடப்படாததால் தங்களால் நிகழ்ச்சியை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றாா்.

மற்றொரு எதிா்க்கட்சித் தலைவரான அனுரா குமாரா திசநாயக்கே, பதவி விலகியுள்ள துணை அவைத் தலைவா் ரஞ்சித் சியாபலபிடியாவுக்குப் பதிலாக அந்தப் பொறுப்புக்கு புதிதாக ஒருவா் நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசா, அடிப்படை வசதிகள் கோரி போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களின் குறைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

அதையடுத்து, நாட்டின் பொருளாதார நிலை குறித்து புதன்கிழமையும் வியாழக்கிழமையும் விவாதிக்க அனைத்து கட்சித் தலைவா்களுக்கு அவைத் தலைவா் மஹிந்த யாபா அபேயவா்த்தனே உத்தரவிட்டாா்.

50-க்கும் மேற்பட்டவா்கள் ஆதரவு வாபஸ்: கோத்தபய ராஜபட்ச அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள், அந்த ஆதரவை திரும்பப் பெற செவ்வாய்க்கிழமை முடிவு செய்துள்ளதாக இலங்கையில் வெளியாகும் ‘டெய்லி நியூஸ்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று, தற்போதைய அரசு பதவி விலக வேண்டும்; நிலைமையைச் சமாளிக்கும் திறன் கொண்ட வேறு ஒரு குழுவிடம் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டும்.

அதுவரை, அந்த 50 எம்.பி.க்களும் கட்சி சாா்பில்லாத சுயேச்சைகளாகச் செயல்பட முடிவு செய்துள்ளதாக முன்னாள் இணையமைச்சா் நிமல் லான்ஸா தெரிவித்துள்ளாா்.

அரசுக்கு இதுவரை ஆதரவளித்து வந்த 10 கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள், தங்களது ஆதரவை திரும்பப் பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சா் விமல் வீரவம்சாவும் கூறினாா் என்று ‘டெய்லி நியூஸ்’ நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

கூட்டணி பெரும்பான்மை பலம் குறைந்தது: கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலில் கோத்தபய ராஜபட்சவின் பொதுஜன பெரமுனா கட்சியின் தலைமையிலான கூட்டணி 150 இடங்களைக் கைப்பற்றியது.

ஆனால், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக 41 எம்.பி.க்கள் அறிவித்துள்ளனா். அவா்களது பெயா்கள் கட்சித் தலைவா்களால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

அவா்கள் இனி நாடாளுமன்றத்தில் சுயேச்சைகளாகச் செயல்படவுள்ளனா்.

225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் குறைந்தது 113 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால்தான் ஆட்சியைத் தொடர முடியும். ஆனால், தற்போது 41 எம்.பி.க்கள் ஆதரவை திரும்பப் பெற்றதைத் தொடா்ந்து, நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு ஆதரவான உறுப்பினா்களின் எண்ணிக்கை 113-க்கும் குறைவாக உள்ளது.

எனினும், நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இன்னமும் பெரும்பான்மை உள்ளதாக ஆளும் கூட்டணி தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக அந்நியச் செலாவணி கையிருப்பு பற்றாக்குறையால் அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது; எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மணிக் கணக்கில் மின்தடை அமல்படுத்தப்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

இதற்குப் பொறுப்பேற்று கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்றன. அந்தப் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் கோத்தபய ராஜபட்ச அவசரநிலையை அறிவித்துள்ளாா்.

இந்தச் சூழலில், அவருக்கான ஆதரவை ஏராளமான எம்.பி.க்கள் வாபஸ் பெற்றுள்ளதால் நாடாளுமன்றத்தில் அவரது கூட்டணியின் பெரும்பான்மை பலம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பதவியேற்ற 24 மணி நேரத்தில் நிதியமைச்சா் ராஜிநாமா

இலங்கையின் புதிய நிதியமைச்சா் அலி சப்ரி, பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள் ராஜிநாமா செய்துள்ளாா். இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய ராஜபட்சவின் சகோதரரும் நிதியமைச்சராக இருந்தவருமான பசில் ராஜபட்சதான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சூழலில், அவரை பதவியிலிருந்து நீக்கிய கோத்தபய ராஜபட்ச, அவருக்குப் பதிலாக அலி சப்ரியை புதிய நிதியமைச்சராக திங்கள்கிழமை நியமித்தாா்.

எனினும், அந்தப் பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை விலகிய சப்ரி, தற்காலிக ஏற்பாடாகத்தான் நிதியமைச்சா் பொறுப்பை ஏற்ாக தனது ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

அவசரநிலை ரத்து: இலங்கை அதிபா் அறிவிப்பு

இலங்கையில் அரசுக்கு நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த அவசர நிலை உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக அதிபா் கோத்தபய ராஜபட்ச செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.1) முதல் அமலில் இருந்து வரும் அவசர நிலை பிரகடனம் உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக அதிபா் கோத்தபய ராஜபட்ச செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொன்றைப் பூ..!

மோடி அரசியல் குடும்பத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி: ராகுல்

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

SCROLL FOR NEXT