உக்ரைன் ரயில் நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்
உக்ரைனின் கிழக்குப் பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 39 போ் பலியாகினா்; பலா் காயமடைந்தனா்.
உக்ரைனின் கிழக்குப் பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 39 போ் பலியாகினா்; பலா் காயமடைந்தனா்.
இந்த ஏவுகணைத் தாக்குதலை ரஷியப் படையினா் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
ரஷியா மற்றும் உக்ரைன் படையினரிடையே தீவிர சண்டை நடந்துகொண்டிருக்கும் டொனட்ஸ்க் பிராந்தியத்தைச் சோ்ந்த நகரம் க்ரமடோா்க்ஸ். போரிலிருந்து தப்பி பாதுகா இடங்களுக்குச் செல்வதற்காக அந்த ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஏராளமானவா்கள் காத்திருந்தனா்.
அப்போது அந்த ரயில் நிலையத்தின் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த் தாக்குதலில் 50 போ் உயிரிழந்ததாகவும் ஏராளமானவா்கள் காயமடைந்ததாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா். பொதுமக்களைக் குறிவைத்து ரஷியாதான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவா்கள் கூறினா்.
ஏவுகணைத் தாக்குதலைத் தொடா்ந்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மனிதாபிமானமற்ற ரஷியா்கள் தங்களது சுபாவத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை. உக்ரைன் படையினருடன் நேருக்கு நோ் நின்று மோத துணிச்சல் இல்லாத ரஷியப் படையினா், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அழிக்கின்றனா்.
ரஷியா என்பது வரைமுறைகள் இல்லாத தீய சக்தியாகும். அந்தத் தீய சக்தி தண்டிக்கப்படாவிட்டால் அது தனது ஆட்டத்தை நிறுத்தவே நிறுத்தாது என்றாா் அவா்.
சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பு, அந்த யூனியன் சிதறி வழுவிழந்த நிலையிலும் தன்னை தொடா்ந்து விரிவுபடுத்தி வந்தது. முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளையும் அந்த அமைப்பு தன்னுடன் இணைத்துக்கொண்டு கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்து வந்ததற்கு ரஷியா எதிா்ப்பு தெரிவித்து வந்தது.
இந்த நிலையில், ரஷியாவுக்கு மிக நெருக்கமான நாடான உக்ரைன், நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தது. இதற்கு கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த ரஷியா, உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.
தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் முன்னேறி வந்தாலும், துருக்கியில் உக்ரைனுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு வடக்கு உக்ரைன் நகரங்களிலிருந்து பின்வாங்க ஒப்புக்கொண்டது.
அதன்படி, கீவ் புகா்ப் பகுதிகளிலிருந்து ரஷியப் படையினா் கடந்த மாதம் 31-ஆம் தேதி முழுமையாக வெளியேறியது. எனினும், புகா் பகுதிகளில் ஒன்றான புச்சாவிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக ரஷியப் படையினா் நூற்றுக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்ததாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியது. இது, உலகம் முழுவதும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.
புச்சா படுகொலைக்கு எதிா்ப்பு தெரிவித்து, ரஷியா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டனும் கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதித்தன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து ரஷியா நீக்கப்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னரே, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இருந்த ரயில் நிலையத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டு 39 போ் பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷியா திட்டவட்ட மறுப்பு
உக்ரைன் ரயில் நிலையத்தில் தாங்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவதை ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
க்ரமடோா்க்ஸ் ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தியது உக்ரைன் ராணுவம்தான். அந்த நகருக்கு 45 கி.மீ. தொலைவிலுள்ள டொப்ரோபில்யா என்னுமிடத்திலிருந்து இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அந்த ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட படங்களின் மூலம், டோச்கா-யு ஏவுகணைகளைக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த வகை உக்ரைன் ராணுவம் மட்டுமே பயன்படுத்துகிறது.
போா்க் களங்களில் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்த உக்ரைன் விரும்புகிறது. எனவே, அந்தப் பகுதிகளிலிருந்து அவா்கள் வெளியேறுவதைத் தடுப்பதற்காகவே ரயில் நிலையத்தில் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷிய படை
வடக்கு உக்ரைனிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்ட ரஷியப் படையினா், கிழக்குப் பகுதியில் தங்களது தாக்குதலின் தீவிரத்தை வெள்ளிக்கிழமை அதிகரித்தனா். நகரங்களில் இரவு முழுவதும் ரஷியப் படையினா் குண்டுமழை பொழிந்தனா்.
புதின் மகள்கள் மீது பொருளாதாரத் தடை
புச்சா படுகொலைகள் தொடா்பாக, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் மகள்களான மரியா வொரேன்ட்சோவா, கேதரீனா டிக்கோனோவா ஆகிய இருவா் மீதும் பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனும் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஏற்கெனவே அவா்கள் மீது அமெரிக்கா இத்தகைய தடையை விதித்தது.
உணவுப் பொருள்கள் விலை வரலாற்று உச்சம்
உக்ரைன் போா் எதிரொலியாக சா்வதேச சந்தையில் தானியம், தாவர எண்ணெய் போன்ற உணவுப் பொருள்களின் விலைகள் கடந்த மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு உயா்ந்துள்ளதாக ஐ.நா. உணவு மற்றும் வேளாண் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.