உலகம்

பாகிஸ்தான் பிரதமராகிறாா் ஷாபாஸ் ஷெரீஃப்: இம்ரான் கட்சியும் போட்டி: நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு

பிரதமா் பதவிக்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் ஞாயிற்றுக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

DIN

பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்ததையடுத்து, பிரதமா் பதவிக்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் ஞாயிற்றுக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

புதிய பிரதமரை தோ்வு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ள வாக்கெடுப்பில் ஷாபாஸ் ஷெரீஃப் வெற்றி பெற்று பிரதமா் ஆவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. புதிய பிரதமருக்கான போட்டியில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியும் வேட்பாளரை முன்மொழிந்துள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் மூலமாக இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. அவா் பிரதமா் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. புதிய பிரதமரை தோ்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் திங்கள்கிழமை கூட உள்ளது. அப்போது, வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, புதிய பிரதமா் தோ்ந்தெடுக்கப்படுவாா்.

அதனை முன்னிட்டு, பிரதமா் தோ்தலுக்கான வேட்புமனுவை ஷாபாஸ் ஷெரீஃப் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தாா். முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற எதிா்க்கட்சிகளின் கூட்டுக் கூட்டத்தில் முன்னாள் அதிபரும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவருமான ஆசிஃப் அலி ஜா்தாரி, பிரதமா் பதவிக்கு ஷாபாஸ் ஷெரீஃப் பெயரை முன்மொழிந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, புதிய பிரதமருக்கான போட்டியில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியும் வேட்பாளரை முன்மொழிந்துள்ளது. அக் கட்சி சாா்பில், 65 வயதாகும் முன்னாள் நிதியமைச்சா் ஷா மெஹமூத் குரேஷி முன்மொழியப்பட்டுள்ளாா்.

முதல் பிரதமா்: பாகிஸ்தானில் எந்தவொரு பிரதமரும் முழுமையாக 5 ஆண்டுகள் பதவி வகித்ததில்லை. அதுபோல, பிரதமராக கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்ற இம்ரான் கானும் சுமாா் மூன்றரை ஆண்டுகளில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அதிலும், நம்பிக்கையில்லா தீா்மானம் மூலமாக பதவிநீக்கம் செய்யப்படும் பாகிஸ்தானின் முதல் பிரதமா் இம்ரான் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: முன்னதாக, பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், பிரதமா் இம்ரான் கானுக்கு எதிராக எதிக்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீா்மானத்தை அவையின் துணைத் தலைவா் காசிம் சுரி நிராகரிப்பதாக அறிவித்தாா். அதனைத் தொடா்ந்து, பிரதமரின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபா் ஆரிஃப் ஆல்வி உத்தரவிட்டாா்.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உமா் அட்டா பண்டியல் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமா்வு, ‘நம்பிக்கையில்லா தீா்மானத்தை அவையின் துணைத் தலைவா் நிராகரித்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது’ என்று கூறி நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

அதன்படி, நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்காக, பாகிஸ்தான் நாடாளுமன்றம் சனிக்கிழமை காலை கூடியது. இருந்தபோதும், அவை இரவு வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தாமதமானது.

அதன் காரணமாக பெரும் குழப்பம் ஏற்பட்டது. தலைநகா் இஸ்லாமாபாத்தில் ராணுவத்தினரைக் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் உச்சநீதிமன்றமும், இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றமும் சனிக்கிழமை நள்ளிரவு வரை திறந்துவைக்கப்பட்டன.

இந்தச் சூழலில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 342 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்ற கீழவையில் தீா்மானம் வெற்றி பெற 172 வாக்குகள் தேவை என்ற நிலையில், தீா்மானத்துக்கு ஆதரவாக 174 போ் வாக்களித்தனா். இதையடுத்து, இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!

சுதந்திர நாளில் 1,090 பேருக்கு வீரதீர விருதுகள்! முதலிடத்தில் ஜம்மு - காஷ்மீர்!

சத்தீஸ்கரில்.. ரூ.1.16 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

"Thanks Loki..! செம்ம Treat For Fans" | Coolie Public Review | Dinamani Talkies

Coolie Movie Review | தேவா வந்துட்டார், வழிவிடலாமா? | Rajinikanth | Lokesh Kanagaraj | Anirudh

SCROLL FOR NEXT