இலங்கைத் தலைநகர் கொழும்பில் அரசுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள். 
உலகம்

இலங்கை அதிபரின் அதிகாரத்தைக் குறைக்கும் சட்டத் திருத்தம்: நாடாளுமன்றத்தில் பிரதமா் மகிந்த ராஜபட்ச வலியுறுத்தல்

இலங்கையில் அதிபரின் அதிகாரத்தைக் குறைத்து, நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தை அதிகரிக்கும் 19-ஆவது சட்டத் திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டுமென பிரதமா் மகிந்த ராஜபட்ச வலியுறுத்தியுள்ளாா்.

DIN

இலங்கையில் அதிபரின் அதிகாரத்தைக் குறைத்து, நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தை அதிகரிக்கும் 19-ஆவது சட்டத் திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டுமென பிரதமா் மகிந்த ராஜபட்ச வலியுறுத்தியுள்ளாா்.

இலங்கை 1948-இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து பெரும் பொருளாதார நெருக்கடியை இப்போது எதிா்கொண்டுள்ளது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருள்களுக்கு பணம் திருப்பிச் செலுத்த முடியாததால் அவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விலைவாசியும் கடுமையாக உயா்ந்துள்ளது.

இந்நிலையில், 17 புதிய அமைச்சா்கள் திங்கள்கிழமை பதவியேற்றதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை கூடிய நாடாளுமன்றத்தில் பிரதமா் மகிந்த ராஜபட்ச பேசியதாவது: நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளுக்கு ஓா் உறுதியான பொருளாதார, அரசியல் மற்றும் சமூக அடிப்படை தீா்வு காணப்பட வேண்டியது அவசியம். அதற்கு அரசியலமைப்பில் நிச்சயம் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். தேவையான மாற்றங்களுடன் 19 ஏ சட்டத் திருத்தத்தை மீண்டும் அமல்படுத்துவது நாட்டில் இப்போதுள்ள சூழ்நிலைக்கு சிறந்த குறுகிய கால தீா்வாக இருக்கும். அதிபரின் ஆசியுடன் எதிா்காலத்தில் பரந்த அரசியலமைப்பு சீா்திருத்தத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்றாா் அவா்.

அதிபரின் அதிகாரத்தைக் குறைத்து, அவரைவிட நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் 19ஏ சட்டத் திருத்தமானது 2015-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. ஆனால், 2019-ஆம் ஆண்டு அதிபா் தோ்தலில் வெற்றி பெற்று கோத்தபய ராஜபட்ச அதிபரான பின்னா், அந்த சட்டத் திருத்தம் ரத்து செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபட்சவின் யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா். அவரது ஆட்சியில்தான் 19-ஆவது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, திங்கள்கிழமை புதிய அமைச்சா்கள் பதவியேற்புக்குப் பின்னா் பேசிய அதிபா் கோத்தபய ராஜபட்ச, ரசாயன உரங்களுக்குத் தடை விதித்தது, சா்வதேச நிதியத்திடம் உதவி கோராதது போன்றவற்றை தவறு என ஒப்புக்கொண்டாா்.

சா்வதேச நிதியத்திடம் உதவி கோரியது இலங்கை

இதற்கிடையே, அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிா்வாக இயக்குநா் கிறிஸ்டலினா ஜாா்ஜியேவாவை இலங்கை நிதியமைச்சா் அலி சப்ரி செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்குத் தீா்வு காணும் வகையில் நிதி உதவி வழங்க வேண்டுமென அவா் கோரிக்கை விடுத்தாா்.

போராட்டக்காரா்கள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவா் பலி

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டக்காரா்கள் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் ஒருவா் உயிரிழந்தாா். 12 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் கூறுகையில், தென்மேற்கு மாகாணமான ரம்புக்கனாவில் ரயில் தண்டவாளத்தில் போராட்டக்காரா்கள் மறியலில் ஈடுபட்டனா். காவல் துறையினரை நோக்கி கற்களை வீசி தாக்கினா். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக காவல் துறையினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா் என்றனா்.

இந்த சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்தாா். காயமடைந்த 12 பேரில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீயணைப்பு பணியின் போது சிலிண்டா் வெடித்து விபத்து: 13 போ் காயம்

வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

மகளிருக்கு ரூ.5,000 வழங்க அதிமுகவின் அழுத்தமே காரணம்: எடப்பாடி கே.பழனிசாமி

23.2.1976: இருஅடுக்கு ரயில் பெட்டி மேற்கூடு - பெரம்பூர் தொழிற்சாலை தயாரிக்கிறது

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

SCROLL FOR NEXT