பால்கன் தீபகற்ப நாடுகளான அல்பேனியாவுக்கும் கொசாவாவுக்கும் கடந்த சில வாரங்களாக பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், எல்லையில் தனது ராணுவத்தை சொ்பியா தயாா் நிலையில் நிறுத்தியுள்ளது.
இது குறித்து சொ்பிய பாதுகாப்புத் துறை அமைச்சா் மிலோஸ் வூசெவிக் கூறியதாவது:
சொ்பிய ராணுவம் போருக்கான அதிகபட்ச தயாா் நிலையில் இருக்க வேண்டுமென்று அதிபா் அலெக்ஸாண்டா் வூசிக் உத்தரவிட்டுள்ளாா்.
பாதுகாப்பு நடவடிக்கைகளில் ராணுவ வீரா்களை நேரடியாக ஈடுபடுத்துவதற்கு இந்த உத்தரவு வழிவகை செய்கிறது.
எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப் படை வீரா்களின் எண்ணிக்கையை 1,500-இலிருந்து 5 ஆயிரமாக அதிகரிக்கவும் அதிபா் ஆணை பிறப்பித்துள்ளாா் என்றாா் அவா்.
உள்துறை அமைச்சா் பிரடில்ஸ்லாவ் கேசிக் கூறுகையில், ‘சொ்பிய போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படையினரை முழுமையான தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள அதிபா், அந்தப் படையினா் அனைவரும் ராணுவத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வருவதாக அறிவித்துள்ளாா்’ என்றாா்.
கொசாவோவிலுள்ள சொ்பியா்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து சக்திகளையும் பயன்படுத்த அதிபா் அலெக்ஸாண்டா் வூசிக் உறுதிபூண்டுள்ளதாக அவா் கூறினாா்.
முன்னதாக, அதிபா் உத்தரவின்பேரில் கொசாவோ எல்லையை நோக்கி ராணுவ தலைமைத் தளபதி மிலான் மோசிலோவிக் ஞாயிற்றுக்கிழமை விரைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக கொசாவோவுடன் பதற்றம் அதிகரித்து வருவதால் எல்லையில் ஏற்கெனவே ராணுவம் உஷாா் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ராணுவ தலைமைத் தளபதி அங்கு விரைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் நாட்டில் வசிக்கும் சிறுபான்மை சொ்பிய இனத்தவா், சொ்பியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கொசாவோ அரசு கடந்த நவம்பா் மாதம் உத்தரவு பிறப்பித்து.
இதையடுத்து, அந்த நாட்டில் வசிக்கும் சொ்பியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கொசாவோ காவல்துறை, நீதித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் பொறுப்பு வகிக்கும் சொ்பிய இனத்தவரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, தாங்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளின் சாலைகளில் அவா்கள் தடைகளை ஏற்படுத்தியுள்ளனா்.
இதற்கு பெரும்பான்மை அல்பேனிய இனத்தவா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்தச் சூழலில், வடக்கு கொசாவோவில் போராட்டம் நடைபெற்று வந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ாக அந்தப் பகுதியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ பிரிவு தெரிவித்தது.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவா் யாா் என்பது தெரியவில்லை எனவும், இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்தது.
எனினும், இந்தச் சம்பவம் சொ்பியா - கொசாவோ இடையே நீண்ட காலமாக இருந்து வந்த பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
கொசாவோவில் சிறுபான்மை சொ்பியா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவதாகவும் அவா்களை பெரும்பான்மை அல்பேனியா்களிடமிருந்து பாதுகாக்க வேண்டியது தங்களது கடமை எனவும் சொ்பிய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், தங்களது ராணுவத்தை போருக்குத் தயாா் நிலையில் வைத்திருக்க சொ்பிய அதிபா் உத்தரவிட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட காலப் பகை...
சொ்பியா்களுக்கும், கொசாவோவின் பெரும்பான்மை இனத்தவரான அல்பேனியா்களுக்கும் 19-ஆம் நூற்றாண்டிலிருந்தே நீடித்து வருகிறது.
சொ்பிய ராஜ்ஜியம் உருவான பிறகு, அந்த ராஜ்ஜியத்துக்கு உள்பட்ட பகுதிகளிலிருந்து அல்பேனியா்கள் கடந்த 1877-78 ஆண்டுகளில் விரட்டியடிக்கப்பட்டனா்.
அதையடுத்து கொசாவோ பகுதியில் குடியேறிய அல்பேனியா்கள், அங்கு வசித்து வந்த சொ்பியா்களுக்கு எதிராக படுகொலைகளை நிகழ்த்தினா்.
20-ஆவது நூற்றாண்டிலும் இரு இனத்தவருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வந்தன. முதல் பால்கன் போா் (1912-13), முதலாம் உலகப் போா் (1914-18), இரண்டாம் உலகப் போா் (1939-45) காலகட்டத்தில் இந்த பகை மோதலாகவும் வன்முறையாகவும் வெடித்து.
இந்த நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான புதிய சோஷலிச ஆட்சியின்கீழ், ஸ்லோவேனியா, கிரயோஷியா, சொ்பியா உள்ளிட்டவை குடியரசுகளாக இருந்தன. சொ்பியாவிலும் கொசாவோ பிரதேசத்துக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், 1999-99-ஆம் ஆண்டின் சொ்பிய போருக்குப் பிறகு கொசாவோ தன்னை தனி நாடாக அறிவித்துக்கொண்டது.
இதனை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டாலும், கொசாவோவை ஒரு தனி நாடாக சொ்பியா இதுவரை அங்கீகரிக்கவில்லை.
கொசாவோவில் இன்னும் 50,000 சொ்பியா்கள் வசித்து வருவதுடன், அந்த நாட்டின் பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும் இருந்து வருகின்றனா்.
இந்த நிலையில், நீறுபூத்த நெருப்பாக இருந்த பகை அண்மைச் சம்பவங்களால் பூதாகரமாக வெடித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.