ஒற்றை ஆளாக ரஷிய ராணுவ வீரரை எதிர்த்த உக்ரேனிய பெண்மணி
உக்ரைன் எல்லைக்குள் ரஷிய ராணுவம் நுழைந்த நிலையில், தலைநகர் கிவ்வை அவர்கள் நெருங்கியுள்ளனர்.
உக்ரைன் எல்லையை தாண்டி ரஷிய ராணுவ வீரர்கள் அந்நாட்டின் தெருக்களுக்குள் நுழைந்த நிலையில், படையெடுப்புக்கு எதிராக உலகம் முழுவகும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. டோக்கியோ முதல் நியூயார்க் வரை, ரஷிய தூதரகம், சதுக்கத்திற்கு வெளியே மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதற்கு மத்தியில், உக்ரைனிய பெண்மணி ஒருவர், ரஷிய ராணுவ வீரரை ஒற்றை ஆளாக எதிர்த்து நிற்பது சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. பயங்கர ஆயுதங்களுடன் நிற்கும் ரஷிய ராணுவ வீரரிடம், எங்கள் நாட்டில் உங்களுக்கு என்ன வேலை என ஒற்றை ஆளாக அந்த பெண்மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
துறைமுக நகரமான கெனிசெஸ்கில் சாலைகளில் நின்றுக் கொண்டிருக்கும் ராணுவ வீரரிடம், நீங்கள் யார் என அந்த பெண் கேள்வி எழுப்ப, அதற்கு பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம் என அவர் பதில் அளிக்கிறார். ரஷிய ராணுவ வீரர்கள் என தெரிந்த பின், சர்ச்சைக்குரிய வார்த்தைகளில் திட்டிவிட்டு, இங்கே இருந்து போய்விடுங்கள் என அப்பெண்மணி சொல்கிறார்.
பயங்கர துப்பாக்கிகளை வைத்திருக்கும் ரஷிய ராணுவ வீரர்கள் அவரை சமாதானப்படுத்த முயல்கிறார்கள். 'இந்த விவாதம் எதற்கும் வழிவகுக்காது' என ராணுவ வீரர்கள் கூற, அதற்கு பதிலளித்த அந்த பெண், "நீங்கள் ஆக்கிரமித்துள்ளீர்கள். நீங்கள் பாசிஸ்டுகள்! இந்த துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு எங்கள் நிலத்தில் என்ன செய்கிறீர்கள்?
இங்கிருக்கும் விதைகளை எடுத்து உங்கள் பாக்கெட்டுகளில் வைத்து கொள்ளுங்கள். எனவே நீங்கள் இங்கே மரணிக்கும்போது அங்கு சூரியகாந்தி பூக்களாவது பூக்கும்" என்றார்.
ராணுவ வீரரை ஒற்றை ஆளாக எதிர்த்து நின்று கேள்வி கேட்கும் அந்த பெண்ணுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.
உக்ரைன் நாட்டின் தேசிய பூ, சூரியகாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.