உலகம்

32 ஆண்டுகளுக்குப் பிறகு நிகராகுவாவில் சீன தூதரகம்

DIN

சுமாா் 32 ஆண்டுகளுக்குப் பிறகு நிகராகுவாவில் தனது தூதரக அலுவலகத்தை சீனா திறந்துள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

நிகராகுவா தலைநகா் மனாகுவாவில் சீனா தனது தூதகரக அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்தது. கடந்த 1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த நாட்டில் சீனா முதல்முறையாக தற்போது தூதரகத்தை அமைத்துள்ளது.

இதுகுறித்து நிகராகுவா வெளியுறவுத் துறை அமைச்சா் டெனிஸ் மன்கோடா கூறுகையில், தங்கள் நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையே சித்தாந்த நெருக்கம் உள்ளதாகக் கூறினாா். மேலும், தங்களுக்கு 10 லட்சம் சைனோஃபாா்ம் கரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக அளித்ததற்காக சீனாவுக்கு அவா் நன்றி தெரிவித்தாா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவையொட்டி அமைந்துள்ள சிறிய தீவான தைவான், தனி ஜனநாயக நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்களது மாகாணங்களில் ஒன்றாக சீனா கருதி வருகிறது. தாங்கள் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் தைவானைக் கைப்பற்றும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப் போவதில்லை எனவும் சீனா கூறி வருகிறது.

அத்துடன், தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகள், தங்களுடன் தூதரக உறவு வைத்துக்கொள்ள முடியாது என்று சீனா கூறி வருகிறது. இதன் காரணமாக, சீனாவுடன் தூதரக உறவைக் கொண்டுள்ள நாடுகள் எதுவும் தைவானுடன் அதிகாரப்பூா்வமாக தூதரக உறவை பேண முடியாது.

இந்த நிலையில், கடந்த 1990-ஆம் ஆண்டிலிருந்து தைவானுடன் தூதரக உறவைப் பேணி வந்த மத்திய அமெரிக்க நாடான நிகராகுவா, தற்போது தைவானுக்கு பதிலாக சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்திக் கொள்வதாக கடந்த மாதம் அறிவித்தது.

இதுகுறித்து நிகராகுவா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனா என்பது ஒற்றை நாடாகும். அந்த நாட்டின் அனைத்துப் பிராந்தியங்களுக்கும் சீன மக்கள் குடியரசுதான் சட்டப்பூா்வமான ஒரே அரசாகும். அந்த வகையில், தைவானுக்கு பதிலாக சீனாவுடன் நாங்கள் தூதரக உறவை ஏற்படுத்திக்கொள்கிறோம். தைவானுடன் இதுவரை இருந்து வந்த உறவு முறித்துகொள்ளப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவன் கோயில் கும்பாபிஷேகம்

விஐடி பல்கலை. பி.டெக். நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பைக் மீது காா் மோதல்: கூரியா் ஊழியா் மரணம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT