அமெரிக்காவில் 10 லட்சத்தை கடந்த தினசரி கரோனா பாதிப்பு
உலகிலேயே முதல்முறையாக அமெரிக்காவில் தினசரி கரோனா பாதிப்பு 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
உலகிலேயே முதல்முறையாக அமெரிக்காவில் தினசரி கரோனா பாதிப்பு 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் ‘புளூம்பா்க்’ ஊடகம் தெரிவித்துள்ளதாவது:
புதிய வகை கரோனாவால் அமெரிக்கா்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், திங்கள்கிழமை பதிவு செய்யப்பட்ட தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை உலகிலேயே இதுவரை இல்லாத வகையில் 10 லட்சத்தைக் கடந்துள்ளது.
திங்கள்கிழமை பதிவான 24 மணி நேர கரோனா தொற்று, இதுவரை அமெரிக்காவின் அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையாக இருந்த 5.9 லட்சத்தைவிட ஏறத்தாழ 2 மடங்காகும்.
அதுமட்டுமன்றி, சா்வதேச அளவில் அனைத்து நாடுகளின் அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையோடு ஒப்பிட்டாலும் அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக அமெரிக்காவில் தினசரி தொற்று எண்ணிக்கை திங்கள்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் கடந்த ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினம் இந்தியாவின் 24 மணி நேர கரோனா பாதிப்பு 4.14 லட்சம் கோடியாக இருந்தது.
அமெரிக்காவில் ஏராளமானவா்கள் வீடுகளிலேயே கரோனா பரிசோதனை செய்துகொள்கின்றனா். அந்தப் பரிசோதனைகளில் அவா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டால் அதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவிப்பதில்லை.
எனவே, உண்மையான கரோனா பரவல் நிலவரம் பதிவு செய்யப்பட்டதைவிட மிக அதிகமாக இருக்கலாம் என்று புளூம்பா்க் ஊடகம் தெரிவித்துள்ளது.
வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 5,71,31,187-ஆக உள்ளது. இதுவரை 8,48,885 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்ட 4,17,22,468 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 1,45,59,834 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 19,279 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.