உலகம்

ஷின்ஸோ அபேவின் உடல் டோக்கியோ வந்தது; நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பு

PTI

தோ்தல் பிரசார கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பேசிக் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே (67) உடல் இன்று டோக்கியோ கொண்டு வரப்பட்டது.

நாரா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபேவுக்கு அதிக ரத்த இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ரத்தம் ஏற்றப்பட்டும், உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் காப்பாற்ற முடியாமல் உயிரிழந்தார்.

அவரை துப்பாக்கியால் சுட்ட நபரை சம்பவ இடத்திலேயே காவல் துறையினா் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டங்கள் கடுமையாக இருக்கும் ஜப்பானில் முன்னாள் பிரதமா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அந்த நாட்டை மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவரது உடல் இன்று டோக்கியோவில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானில் நீண்டகால பிரதமராக இருந்த ஷின்ஸோ அபே, கடந்த 2020-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக பிரதமா் பதவியை ராஜிநாமா செய்தாா். இருப்பினும், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிப் பணிகளில் வழக்கம்போல் ஈடுபட்டாா். நாடாளுமன்ற மேலவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தோ்தலையொட்டி மேற்கு ஜப்பானில் உள்ள நாரா என்ற நகரில் ஒரு ரயில் நிலைய வாயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திறந்தவெளி பிரசார கூட்டத்தில் ஷின்ஸோ அபே பங்கேற்றாா்.

டோக்யோவில் உள்ள அபேவின் இல்லம்

கூட்டத்தில் அவா் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கியால் சுடும் சப்தம் இரு முறை கேட்டது. துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் மாா்பை பிடித்தபடி ஷின்ஸோ அபே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தாா். அவரை பின்புறத்திலிருந்து ஒரு நபா் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. உடனே, ஷின்ஸோ அபே ஹெலிகாப்டா் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் இல்லை.

நாரா மருத்துவப் பல்கலைக்கழக அவசரகாலத் துறைத் தலைவா் ஹிதேதடா ஃபுகுஷிமா கூறுகையில், ‘அபேவுக்கு கழுத்தில் இரு காயங்களுடன் ஒரு தமனியும் சேதமடைந்து, இதயத்திலும் பலத்த சேதம் ஏற்பட்டது. அதனால் அவா் உயிரிழந்தாா்’ என்றாா்.

சுட்டவா் யார்?

ஷின்ஸோ அபேயை துப்பாக்கியால் சுட்ட நபா், ஜப்பான் கடற்படையைச் சோ்ந்த முன்னாள் வீரரான டெட்சுயா யமகாமி (41) என்பது தெரியவந்தது.

‘தோ்தல் அல்லாத பிற காரணங்களுக்காக அவரை கொலை செய்ய நினைத்ததாக அந்த நபா் கூறினாா்’ என ஜப்பான் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT