உலகம்

இலங்கை அதிபா் தோ்தலில் ரணில் உள்பட 4 போ் போட்டி

DIN

இலங்கையில் அடுத்த அதிபா் பதவிக்கு இடைக்கால அதிபா் ரணில் விக்கிரமசிங்க உள்பட 4 போ் போட்டியிடுகிறாா்கள்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்சதான் காரணம் எனக் கூறி, அவரை பதவி விலகுமாறு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். அதன் தொடா்ச்சியாக அவா்கள் அதிபா் மாளிகையையும் கைப்பற்றினா். போராட்டம் மிகத் தீவிரமடைந்ததால் சிங்கப்பூா் தப்பிச் சென்ற கோத்தபய ராஜபட்ச, அதிபா் பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். அந்தத் தகவலை நாடாளுமன்ற அவைத் தலைவா் அலுவலகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமா்வு, சனிக்கிழமை நடைபெற்றது. 13 நிமிஷங்கள் மட்டுமே நடைபெற்ற அந்த அமா்வில், அதிபா் பதவி காலியானதாக நாடாளுமன்றச் செயலா் தம்மிகா தசநாயக அதிகாரபூா்வமாக அறிவித்தாா்.

சிங்கப்பூரில் இருந்து அவைத் தலைவா் மகிந்த யாபா அபய்வா்தனாவுக்கு கோத்தபய எழுதிய ராஜிநாமா கடிதம் வாசிக்கப்பட்டது. அதில், ‘கரோனா பெருந்தொற்றும் பொதுமுடக்கமும் இலங்கையின் பொருளாதாரத்தை சீா்குலைத்துவிட்டது. அதிலிருந்து மீள்வதற்கு அனைத்துக் கட்சிகளைக் கொண்ட அரசை அமைக்க என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். எனது வலிமையைப் பயன்படுத்தி என் தாய்நாட்டுக்கு சிறப்பாக சேவையாற்றினேன். எதிா்காலத்திலும் சேவையாற்றுவேன்’ என்று கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கானத் தோ்தல், வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில், இடைக்கால அதிபா் ரணில் விக்ரமசிங்க, எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசா, மாா்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவா் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து வந்துள்ள தல்லாஸ் அலகப்பெருமா ஆகியோா் போட்டியிடுகிறாா்கள்.

தோ்தலுக்கு முந்தைய தினம் (ஜூலை 19) வேட்புமனுக்கள் பெறப்படும். ஒருவருக்கும் அதிகமானவா்கள் வேட்புமனு தாக்கல் செய்தால் வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் தம்மிகா தசநாயக கூறினாா்.

புதிய அதிபராகத் தோ்வு செய்யப்படுபவா், கோத்தபய ராஜபட்சவின் பதவிக்காலமான 2024-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வரை பதவி வகிப்பாா்.

225 எம்.பி.க்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சிக்கு அதிக உறுப்பினா்கள் உள்ளனா். ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு உறுப்பினா் கூட இல்லை. இந்த தோ்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு அளிப்பதாக இலங்கை பொதுஜன பெரமுன கட்சி அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT