முகப்பு
உலகம்

உக்ரைன் பகுதிகளை இணைத்துக்கொள்ள ரஷியா திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைனின் கிரீமியாவைப் போலவே, அந்த நாட்டில் தாங்கள் ஆக்கிரமித்துள்ள மேலும் சில பகுதிகளை தங்களுடன் இணைத்துக்கொள்ள ரஷியா திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைனின் மரியுபோல் நகர மின்கம்பத்தில் ரஷியக் கொடியை ஏற்றும் நகராட்சி ஊழியா்கள் (கோப்புப் படம்).
பகிர்:

உக்ரைனின் கிரீமியாவைப் போலவே, அந்த நாட்டில் தாங்கள் ஆக்கிரமித்துள்ள மேலும் சில பகுதிகளை தங்களுடன் இணைத்துக்கொள்ள ரஷியா திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் மீது கடந்த 2014-ஆம் ஆண்டு படையெடுத்த ரஷியா, பின்னர் அந்தப் பகுதியை தங்களுடன் இணைத்துக் கொண்டது. தாங்களே உருவாக்கிகொண்ட வழிகாட்டு நெறிமுறைகளைக் காரணம் காட்டி அந்த செயலை ரஷியா நியாயப்படுத்தியது.
தற்போதும் உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்த நாட்டின் பகுதிகளை தங்களுடன் இணைத்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறி வருகிறது
ஆனால், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் அந்த வார்த்தைகளை  நம்பிவிட வேண்டாம். 2014-ஆம் ஆண்டு கிரீமியாவை இணைத்துக் கொள்வதற்காக பயன்படுத்திய அதே வழிகாட்டு நெறிமுறைகளை அதிபர் புதின் தற்போது மீண்டும் தூசி தட்டி எடுத்துள்ளதாக எங்களுக்கு உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன.
தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைன் பகுதிகளில் போலியாக பொதுவாக்கெடுப்பு நடத்தி, அதில் பெரும்பாலானவர்கள் தங்களுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறி அந்தப் பகுதிகளை தங்களுடன் இணைத்துக்கொள்ள ரஷியா திட்டமிட்டு வருகிறது.
அதற்காக, ஆக்கிரமிப்பு பகுதிகளில் தங்களது கைப்பாவைகளை ஆட்சியாளர்களாக ரஷியா இப்போதே நிறுவியுள்ளது என்றார் அவர்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபர் விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அரசுப் படையினருக்கு எதிராக சண்டையிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினர். அப்போது ரஷியாவும் உக்ரைனின் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.
அதற்கு முன்னதாக, ரஷியாவுடன் இணைவது குறித்து பொதுமக்களின் கருத்தைக் கேட்பதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனை அந்தப் பகுதியைச் சேர்ந்த உக்ரைன் ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். எனினும், பொதுவாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்காளர்கள் ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்தனர்.
அதனை அடிப்படையாகக் கொண்டு கிரீமியா தீபகற்பத்தை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. எனினும், அந்தப் பொதுவாக்கெடுப்பு போலியானது என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி, கிரீமியா இணைப்பை நிராகரித்தன.
இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.
அதன் ஒரு பகுதியாக டான்பாஸ் பிராந்தியத்தில் இன்னும் அரசுப் படையினர் வசமிருக்கும் பகுதிகளை கைப்பற்றுவதற்காக கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து ரஷியப் படையினர் சண்டையிட்டு முன்னேறி வருகின்றனர். மேலும், கிரீமியா தீபகற்பத்துக்கும் டான்பாஸ் பிராந்தியத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவற்காக இடைப்பட்ட பகுதிகளையும் ரஷியப் படையினர் கைப்பற்றினர். 
இந்தச் சூழலில், கிரீமியாவைப் போலவே தற்போது கைப்பற்றப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகளையும் தங்களுடன் இணைத்துக்கொள்ள ரஷியா திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

‘எரிவாயு விநியோகம் இன்னும் குறையும்’

ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு எடுத்துச் செல்லும் குழாய் இடையே பொருத்தப்பட்டுள்ள ஒரு டா்பைன் பழுதடைந்துள்ளதாகவும் அதனை மாற்றாவிட்டால் எரிவாயு விநியோகம் பாதியாகக் குறைக்கப்படும் என்றும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா். இது, ஏற்கெனவே குறைந்த எரிவாயு வரத்தால் பொருளாதார சிக்கலை சந்தித்து வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments