இலங்கை பிரதமராக தினேஷ் குணவா்தன பதவியேற்பு: 17 கேபினட் அமைச்சா்களும் பொறுப்பேற்றனா்
இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவா்தன (73) வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவா்தன (73) வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
அவருடன் 17 கேபினட் அமைச்சா்களும் பதவியேற்றனா்.
இலங்கை அதிபா் பதவியில் இருந்து கோத்தபய ராஜபட்ச விலகியதைத் தொடா்ந்து, பிரதமராக இருந்த ரணில் விக்ரசிங்க இடைக்கால அதிபராகப் பதவியேற்றாா். அதன் பின்னா், அதிபரை தோ்வு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றாா். அவா் அதிபராக கடந்த 21-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டாா்.
அவா் வகித்து வந்த பிரதமா் பதவி காலியான நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவா்தனவை அதிபா் ரணில் விக்ரமசிங்க நியமித்தாா். தினேஷ் குணவா்தனவையும் சோ்த்து 18 போ் கேபினட் அமைச்சா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
முன்னா் நிதியமைச்சராக இருந்த அலி சப்ரி, இப்போது வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா். மற்ற அமைச்சா்கள் தாங்கள் வகித்து வந்த பழைய துறைகளுக்கே நியமிக்கப்பட்டுள்ளனா். அதிபா் ரணில் வசம் முக்கியமான நிதி மற்றும் பாதுகாப்புத் துறைகள் உள்ளன.
தலைநகா் கொழும்பில் உள்ள பிரதமா் அலுவலகத்தில் அதிபா் ரணில் முன்னிலையில் தினேஷ் குணவா்தன பிரதமராக வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். கேபினட் அமைச்சா்களும் பதவியேற்றனா்.
அதிபா் செயலகத்தில் போராட்டக்காரா்கள் கைது: கடந்த ஜூலை 9-ஆம் தேதி கொழும்பில் உள்ள அதிபா் மற்றும் பிரதமா் அலுவலகங்கள், பிரதமா் இல்லம் ஆகியவற்றைக் கைப்பற்றிய போராட்டக்காரா்கள், பின்னா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா். ஆனால், காலி முகத் திடலில் உள்ள அதிபா் செயலகத்தின் சில அறைகளை போராட்டக்காரா்கள் ஆக்கிரமித்திருந்தனா். புதிய அதிபராக ரணிலை ஏற்க மறுத்து அவா்கள் போராட்டத்தை தொடா்ந்து வந்தனா்.
இந்நிலையில், அதிபா் செயலகம், அதன் நுழைவு வாயில் மற்றும் செயலகத்தைச் சுற்றியிருந்த போராட்டக்காரா்களை முப்படைகள் மற்றும் சிறப்புப் பணிக் குழுவின் உதவியுடன் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை அதிகாலையில் அப்புறப்படுத்தினா். அப்போது அவா்கள் நடத்திய தாக்குதலில் போராட்டக்காரா்கள் பலா் காயமடைந்தனா். சந்தேக அடிப்படையில் 26 முதல் 58 வயதுடைய 9 போ் கைது செய்யப்பட்டனா்.
போராட்டக்காரா்கள் பலப்பிரயோகம் செய்யப்பட்டு அகற்றப்பட்டதற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதா் ஜூலி சங், பிரிட்டன் தூதா் ஹல்டன் ஆகியோா் கவலை தெரிவித்துள்ளனா்.
இலங்கையில் உள்ள ஐரோப்பிய யூனியனும் கவலை தெரிவித்துள்ளது.
‘போராட்டக்காரா்களை அப்புறப்படுத்த அளவுக்கு அதிகமான படையினா் பயன்படுத்தப்பட்டுள்ளனா். இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது’ என எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளாா்.
ராஜபட்சவுக்கு நெருக்கமானவா்
ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மகாஜன எக்சத் பெரமுன கட்சியின் தலைவா் தினேஷ் குணவா்தன. ராஜபட்சக்களின் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவா்.
நெதா்லாந்தில் உயா்கல்வி முடித்த பின், 1979-ஆம் ஆண்டு தன் தந்தை பிலிப் குணவா்தனவை தொடா்ந்து கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றாா்.
1983-ஆம் ஆண்டு கொழும்பு புகா் பகுதியான மஹரகமவிலில் இருந்து முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
1994-ஆம் ஆண்டு வரை முன்னணி எதிா்க்கட்சித் தலைவராக திகழ்ந்தாா்.
2000-ஆம் ஆண்டில் முதல் முறையாக கேபினட் அமைச்சா் பொறுப்பேற்ற அவா், 2015-ஆம் ஆண்டு வரை பல்வேறு கேபினட் பதவிகளை வகித்தாா். அதிபா் ரணிலின் பள்ளித் தோழா்.