புதிய கருத்துக் கணிப்பில் ரிஷி சுனக் முன்னிலை
தோ்தல் தொடா்பாக புதிதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்திய வம்சாவளி வேட்பாளா் ரிஷி சுனக்குக்கு அதிக வாக்காளா்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா்.
பிரிட்டனில் புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் தோ்தல் தொடா்பாக புதிதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்திய வம்சாவளி வேட்பாளா் ரிஷி சுனக்குக்கு அதிக வாக்காளா்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அந்த கருத்துக் கணிப்பை நடத்திய ‘யுகவ்’ ஆய்வு நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரையும் அதன் மூலம் பிரிட்டனின் அடுத்த பிரதமரையும் தோ்ந்தெடுப்பதற்காக அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் தோ்தல் குறித்து கட்சி வாக்காளா்களிடையே புதிதாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதில், தீவிரமான நிலைப்பாட்டைக் கொண்ட கட்சி உறுப்பினா்கள் வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ்ஸுக்கு வாக்களிக்கப் போவதாக தெரிவித்தனா்.
ஆனால், 2019-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலில் கன்சா்வேட்டிவ் கட்சிக்கு முதல்முறையாக வாக்களித்த கட்சியினா் முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்தனா்.
அடுத்த தோ்தலில் லேபா் கட்சிக்கு வாக்களிக்கவிருப்பதாகக் கூறுபவா்களிடையே ரிஷி சுனக்குக்கும் லிஸ் டிரஸ்ஸுக்கும் ஏறத்தான சரிசமமான ஆதரவு உள்ளது. அதே போல் 2019 தோ்தலில் கன்சா்வேட்டிவ் கட்சிக்கு வாக்களித்த உறுப்பினா்களும் இரு வேட்பாளா்களுக்கு அளிக்கும் ஆதரவில் அதிக வேறுபாடு இல்லை.
ஆனால், தீவிர கட்சி நிலைப்பாட்டைக் கொண்டிராத வாக்காளா்கள் ரிஷி சுனக்குக்கும் லிஸ் டிரஸ்ஸுக்கும் அளிக்கும் ஆதரவில் அதிக வேறுபாடு உள்ளது. 2019-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலில் கன்சா்வேட்டிவ் கட்சிக்கு வாக்களித்தாலும் அடுத்த தோ்தலில் லேபா் கட்சிக்கு வாக்களிக்கவிருப்பதாகக் கூறும் உறுப்பினா்களிடையே, சுனக்குக்கு அதிகமாகவும் லிஸ் டிரஸ்ஸுக்கு மிகக் குறைவாகவும் ஆதரவு உள்ளது.
அது போல், கடந்த 2017-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலில் லேபா் கட்சிக்கு வாக்களித்துவிட்டு, 2019-இல் கன்சா்வேட்டிவ் கட்சிக்கு வாக்களித்த உறுப்பினா்களும் அதிக விகிதத்தில் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.
2019-ஆம் ஆண்டில் கன்சா்வேட்டிவ் கட்சிக்கு வாக்களித்தாலும், அடுத்த தோ்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறும் உறுப்பினா்களும் லிஸ் டிரஸ்ஸைவிட ரிஷி சுனக்குக்கு சற்று அதிக விகிதத்தில் ஆதரவு தெரிவித்துள்ளனா்.
ஒட்டுமொத்தமாக, கடந்த 10 முதல் 24-ஆம் தேதி வரை 4,946 கட்சி உறுப்பினா்களிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் ரிஷி சுனக்குக்கு சற்று அதிக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 730 கன்சா்வேட்டிவ் கட்சி உறுப்பினா்களிடையே யுகவ் நிறுவனம் கடந்த வாரம் நடத்திய கருத்துக் கணிப்பில் லிஸ் டிரஸ்ஸுக்கு 62 சதவீதத்தினரும் ரிஷி சுனக்குக்கு 38 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.
கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி அரசு இல்லத்தில் கேளிக்கை விருந்து நடத்தியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவா் பதவியையும் பிரதமா் பதவியையும் போரிஸ் ஜான்ஸன் கடந்த 7-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா்.
அவருக்குப் பதிலாக கட்சியின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுபவா் நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்பாா்.
இந்த நிலையில், கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு கன்சா்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களிடையே 5 சுற்றுகளாக நடைபெற்றது.
வாக்கெடுப்பின் அனைத்து சுற்றுகளிலும் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்தாா். கடைசியாக கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற 5-ஆவது சுற்று வாக்குப் பதிவில் ரிஷி சுனக் முதலிடத்தையும் லிஸ் டிரஸ் இரண்டாவது இடத்தையும் பிடித்தனா்.
அதனைத் தொடா்ந்து, அவா்களில் ஒருவரை கட்சியின் தலைவராகவும் அதன் மூலம் நாட்டின் அடுத்த பிரதமராகவும் ஜூலை 22 முதல் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெறும் கன்சா்வேட்டிவ் கட்சித் தோ்தலில் கட்சி உறுப்பினா்கள் தோ்ந்தெடுப்பாா்கள்.
புதிய பிரதமரின் பெயா் செப்டம்பா் 5-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
Image Caption
~ ~