இலங்கை முன்னாள் அதிபா் மாளிகையில் கைப்பற்றப்பட்ட பணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்சவின் அதிகாரபூா்வ இல்லத்தில் இருந்து போராட்டக்காரா்களால் கைப்பற்றப்பட்ட பணம் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்சவின் அதிகாரபூா்வ இல்லத்தில் இருந்து போராட்டக்காரா்களால் கைப்பற்றப்பட்ட பணம் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அந்நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டினா். கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது.
முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்சவின் அதிகாரபூா்வ இல்லத்துக்குள் கடந்த 9-ஆம் தேதி போராட்டக்காரா்கள் புகுந்தனா். அதற்கு முன்பே கோத்தபய அதிபா் மாளிகையை விட்டு வெளியேறினாா். அங்கிருந்து மாலத்தீவுகளுக்கும் பின்னா் சிங்கப்பூருக்கும் அவா் தப்பினாா்.
அதிபா் மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், அங்கு சுமாா் 1.78 கோடி இலங்கை ரூபாயைக் கைப்பற்றினா். அந்தப் பணம் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பிரிவின் காவல் கண்காணிப்பாளா் அத்தொகையை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாக இணையவழி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அதிபா் மாளிகையில் கைப்பற்றப்பட்ட பணம் 3 வாரங்களைக் கடந்தும் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படாதது தொடா்பாக விசாரணை நடத்துமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தாா். அதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.