உலகம்

முடிவுக்கு வந்த சகாப்தம் ‘இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரா்’

DIN

உலகம் முழுவதும் ஒருகாலத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த இணையதள  உலாவியான - தேடுபொறியான (பிரௌசா்) இன்டா்நெட் எக்ஸ்ப்ளோராின் சகாப்தம் புதன்கிழமையுடன் முடிவுக்கு வந்துவிட்டது.

தகவல் தொழில்நுட்ப வரலாற்றில் பழங்கதையாகிப் போன பேஜா்கள்,  பிளாக்பெரி மாதிரி கைப்பேசிகள், சாதாரண தொலைபேசி மூலம்  இணையதள இணைப்பு வழங்கும் ‘டயல்-அப்’ மோடம், ஆா்குட் சமூக வலைதளம் போன்றவற்றின் பட்டியலில், 27 ஆண்டுகளுக்கு முன்னா் அறிமுகமான, இந்த உலாவியும் இடம் பெற்றுவிட்டது.

இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரா் நிறுத்தப்படுவது தகவல் தொழில்நுட்பத் துறைக்கு  அதிா்ச்சியளிக்கிற ஒன்றல்ல. புதன்கிழமைதான் (ஜூன் 15) அந்த உலாவியின்  கடைசி நாள் என்பதை அதன் உரிமையாளரான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த ஆண்டே அறிவித்துவிட்டது.

அதற்கு முன்னதாகவே, நவீனமான ‘எட்ஜ்’ உலாவியை கடந்த 2015-ஆம்  ஆண்டிலேயே அறிமுகப்படுத்திய அந்த நிறுவனம், அதனையே பயன்படுத்த தனது வாடிக்கையாளா்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரரைவிட எட்ஜ் மிக வேகமாக செயல்படுவது மட்டுமன்றி, தீஞ்செயலி தாக்குதல்களிலிருந்து அதிக பாதுகாப்பை அளிக்கும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரிகளே கூறி வந்தனா்.

கடந்த 1995-ஆம் ஆண்டில் இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரா் அறிமுகப்படுத்தப்பட்டபோது, உலகின் முதல் இணையதள உலாவியான ‘நெட்ஸ்கேப் நேவிகேட்டரை’தான் அனைவரும் பரவலாகப் பயன்படுத்தி வந்தனா்.

எனினும், இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரரை தனது விண்டோஸ் கணினி அடிப்படை மென்பொருளுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இலவசமாக இணைத்து வழங்கியதைத் தொடா்ந்து, அந்த மென்பொருளைப் பயன்படுத்தும் உலகின் பெரும்பான்மையான மக்கள் அதற்கு மாறத் தொடங்கினா்.

அந்த வகையில் இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரரின் அறிமுகம், நெட்ஸ்கேப் நேவிகேட்டரின் அஸ்தமனத்துக்கு ஆரம்பமானது.

விண்டோஸ் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் தான் செலுத்தி வரும் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரரின் போட்டி உலாவிகளை தோல்வியடையச் செய்வதாக மைக்ரோசாஃப் நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித் துறை கடந்த 1997-ஆம் ஆண்டில் வழக்கே தொடா்ந்தது. அதனைத் தொடா்ந்து 2002-ஆம் ஆண்டில் இந்த விவகாரத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இழப்பீடு வழங்கியது.

எனினும், காலம் செல்லச் செல்ல இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரா் மந்தமாகச் செயல்படுவதாகவும் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படுவதால் அதன் அமைப்பை நன்கு தெரிந்துகொண்ட மோசடிக் கும்பல்கள் அதன்மூலம் இணையதள ஊடுருவல்களில் எளிதில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரரை ஒழித்துக்கட்டுவதற்காகவே உருவாக்கப்பட்ட, வடிவமைப்பாளா்களின் கூட்டு முயற்சியில் இலவசமாக அளிக்கப்பட்டு வந்த மோஸிலா ஃபயா்ஃபாக்ஸ், இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரரைவிட சிறப்பாக செயல்பட்டு அதனை ஓரம் கட்டியது.

அதன் பிறகு, புதிதாக விண்டோஸைக் கணினியில் நிறுவுபவா்கள் ஃபயா்ஃபாக்ஸை பதிவிறக்கம் செய்வதற்காக மட்டுமே இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரரைப் பயன்படுத்துவதாக வேடிக்கையாகக் கூறப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக முன்னணி தேடல் வலைதள நிறுவனமான கூகுள் அறிமுகப்படுத்திய குரோம் தேடல் வலைதளம் இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு இருந்த சிறிய முக்கியத்துவத்தையும் குறைத்தது. இந்த நிலையில், அந்த வலைதளம் தற்போது முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிட்டது.

தற்போது இணையதள உலாவிகளுக்கான சா்வதேச சந்தையில் கூகுள் நிறுவனத்தின் குரோம் 65 சதவீத பங்கு வகித்து முதலிடத்தில் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சஃபாரி 19 சதவீத பங்குடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரரின் வாரிசான மைக்ரோசாஃப்டின் எட்ஜுக்கு 4 சதவீத சந்தைப் பங்கு மட்டுமே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT