உலகம்

இலங்கையில் புதிய உச்சத்தில் பணவீக்கம்: ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.254 

DIN


இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.254-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
தொடரும் பொருளாதார நெருக்கடியால் விலைவாசி மிக கடுமையாக உயர்ந்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கை இன்னும் விடுபடவில்லை. இதனால் இலங்கையின் ஏற்றுமதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சுற்றுலாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பொருளாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. இதன் விளைவாக, இலங்கையின் அந்நிய செலாவணி வரத்தும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. 

சீனா உள்பட பல நாடுகளின் கடன் வலையில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. நாட்டில் உணவுப் பிரச்னை மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளது.

நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருவதுடன், பணவீக்கத்தின் தாக்கம் பொதுமக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உண்மையில், சீனா உள்பட பல நாடுகளின் கடனில் சிக்கியுள்ள இலங்கை, தற்போது திவாலாகும் நிலையை எட்டியுள்ளதால், மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகின்றனர். இங்கு பொது உபயோகப் பொருள்களின் விலையே விண்ணைத் தாண்டி சென்றுள்ளது.

அண்டை நாடான இலங்கையில் புதிய உச்சத்தில் பணவீக்கம் இருந்து வரும் நிலையில், மக்கள் அன்றாட தேவைக்கான அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கே பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். 

இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா தாக்குதலின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 130 டாலர்களுக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால், இலங்கையில் எரிபொருள் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், நாட்டின் இரண்டாவது பெரிய சில்லறை எரிபொருள் விநியோகஸ்தரான இலங்கை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இலங்கையில் வியாழன் நள்ளிரவு பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து உத்தரவிட்டது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 ஆக உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.254 ஆகவும், டீசலின் லிட்டருக்கு ரூ. 75 ஆக உயர்ந்து ஒரு லிட்டர் டீசல்  ரூ.176 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 16.3 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அந்நியச் செலாவணியின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், இலங்கை ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. இதன் காரணமாக, பருப்பு கிலோ ரூ.250, சர்க்கரை ரூ.215, உருளைக்கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400, உளுந்து கிலோ ரூ.2,000, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.35  அதிகரித்துள்ளது. 

மேலும், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால், குறிப்பிடத்தக்க எரிபொருள் தட்டுப்பாடு உள்ளது. நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான நிதிப் பற்றாக்குறை காரணமாக, இலங்கையில் தினமும் ஏழரை மணிநேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.

அதுமட்டுமின்றி கச்சா எண்ணெய் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

எரிபொருள்களின் விலை உயர்வால் கார், ஆட்டோ, பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  எரிபொருள் விலை உயர்வால் குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.30 முதல் 35 வரை அதிகரிக்கும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஞ்சன பிரியஞ்சித் எச்சரித்துள்ளார். இதனை கருத்தில் கொண்டு தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார். 

விமான டிக்கெட்டுகளின் விலை 27 சதவிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து

உன்னைப் போல யாருமில்லை! கெடிகா சர்மா..

வைரலாகும் ரன்பீர் கபூரின் புகைப்படங்கள்!

ஷாலு.. சஞ்சிதா ஷெட்டி!

ஐடிஐ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம்!

SCROLL FOR NEXT