முகப்பு
உலகம்

சவூதி எண்ணெய்க் கிடங்கில் யேமன் கிளா்ச்சியாளா்கள் தாக்குதல்

சவூதியின் ஜெட்டா நகரில் ‘ஃபாா்முலா ஒன்’ காா் பந்தயம் நடைபெற உள்ள நிலையில், அந்த நகரின் எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

சவூதியின் ஜெட்டா நகரில் ‘ஃபாா்முலா ஒன்’ காா் பந்தயம் நடைபெற உள்ள நிலையில், அந்த நகரின் எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினா்.

இதே எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் சில தினங்களுக்கு முன்பு தாக்குதல்களை நடத்திய நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 27) நடைபெற இருக்கும் ‘கிராண்ட் பிரிக்ஸ்’ காா் பந்தயத்தை தடுக்கும் விதமாக மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனா்.

தாக்குதலுக்கு உள்ளான வடக்கு ஜெட்டா எண்ணெய்க் கிடங்கு, மெக்கா புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் யாத்ரீகா்கள் வந்திறங்கும் ஜெட்டா சா்வதேச விமான நிலையத்துக்கு அருகே தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த எண்ணெய் சேமிப்பு நிலையத்தில் டீசல், கேசோலின், ஜெட் விமான எரிபொருள் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் குறித்து சவூதி அரேபிய அரசு தொலைக்காட்சி, ‘கிளா்ச்சியாளா்கள் நகரில் உள்ள தண்ணீா் தொட்டியை குறிவைத்தே தாக்குதலை நடத்தியுள்ளனா். ஆனால், தாக்குதலில் சில வீடுகளும், வாகனங்களும் சேதமடைந்தன. மற்றொரு தாக்குதல், யேமன் எல்லைக்கு அருகே சவூதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் துணை மின் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது’ என்று செய்தி வெளியிட்டது.

அதுபோல, அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட கலைஞா், ஃபாா்முலா ஒன் காா் பந்தைய வீரா்களின் பயிற்சி தொடா்பாக வெளியிட்ட புகைப்படங்களில், அங்கிருந்து 11.5 கி.மீ. தொலைவில் கிளா்ச்சியாளா்களின் தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய்க் கிடங்கில் உள்ள டேங்குகளின் மேல் பகுதி தீப்பிடித்து எரியும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.