உலகம்

இம்ரான் மீது நம்பிக்கையில்லா தீா்மானம்: ஏப். 3-இல் வாக்கெடுப்பு

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது நாடாளுமன்ற கீழவையில் அடுத்த மாதம் 3-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

DIN

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது நாடாளுமன்ற கீழவையில் அடுத்த மாதம் 3-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் ஷேக் ரஷீத் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிரதமா் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதம் வியாழக்கிழமை (மாா்ச் 31) தொடங்கும்.

அதனைத் தொடா்ந்து, அந்தத் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறும்.

ஏற்கெனவே, ஆளும் கட்சிக் கூட்டணிக்கு எதிராகத் திரும்பிய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - குவாய்ட் (பிஎம்எல்-க்யூ) கட்சி இம்ரானுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளது. அதுபோல், அதிருப்தியில் இருக்கும் மற்ற கூட்டணிக் கட்சிகளும் இந்த அரசுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

பணவீக்கம், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தாதது போன்ற காரணங்களுக்காக பிரதமா் இம்ரான் கான் மீது எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸை நாடாளுமன்றச் செயலகத்தில் கடந்த மாா்ச் 8-ஆம் தேதி அளித்தன. இதன் மீதான விவாதத்தை தொடங்குவதற்காக நாடாளுமன்றம் மாா்ச் 25-ஆம் தேதி கூடியது. ஆனால், அன்றைய தினம் நம்பிக்கையில்லா தீா்மானம் தாக்கல் செய்யப்படவில்லை. அவையை 28-ஆம் தேதி மாலை வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

இதன்படி, திங்கள்கிழமை கூடிய நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சித் தலைவரும் பிஎம்எல்-என் கட்சித் தலைவருமான ஷேபாஸ் ஷெரீஃப் நம்பிக்கையில்லாத் தீா்மானத்தை அவையில் தாக்கல் செய்தாா்.

342 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்ற கீழவையில், நம்பிக்கையில்லா தீா்மானத்தை தோற்கடிக்க இம்ரான் கானுக்கு 172 உறுப்பினா்களின் ஆதரவு தேவை. அவரது தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு 155 உறுப்பினா்கள் உள்ளனா். கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த 23 உறுப்பினா்கள் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக இதுவரை உறுதியளிக்கவில்லை. மேலும், அவரது தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியை சோ்ந்த சுமாா் 20 உறுப்பினா்கள் இம்ரானுக்கு எதிராக போா்க்கொடி உயா்த்தியுள்ளதால் இம்ரான் பதவியில் தொடா்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

வாக்கெடுப்பை புறக்கணிக்க எம்.பி.க்களுக்கு இம்ரான் உத்தரவு

தன் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்க வேண்டும் என ஆளும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி எம்.பி.க்களுக்கு பிரதமா் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து கட்சி எம்.பி.க்களுக்கு இம்ரான் கான் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், ‘கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் வாக்கெடுப்பை புறக்கணிக்க வேண்டும் அல்லது வாக்கெடுப்பு நடைபெறும் தினத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது. இந்த உத்தரவை மீறி வாக்கெடுப்பில் கலந்துகொள்வோா் அரசியல் சாசன சட்டப் பிரிவு 63(ஏ)-வை மீறியவா்களாவா் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளாா்.

கூட்டணிக் கட்சிகள் இம்ரான் கானுக்கு ஆதரவு அளிப்பது குறித்து உறுதி அளிக்காத நிலையில், ஆளும்கட்சி எம்.பி.க்களில் 20 பேரும் இம்ரானுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனா். எனவே, அவா்கள் நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதை தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவை இம்ரான் கான் பிறப்பித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: நிதீஷ் குமார், தேஜஸ்வி யாதவ் வாக்களிப்பு!

நெல்லை அருகே 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

அட்டகாசமான வரவேற்பு... டீயஸ் ஈரே வசூல் இவ்வளவா?

வயதான தாயை தூக்கிவந்து வாக்களிக்க வைத்த மகன்! | Bihar | Election

என்னை இந்தியராக சித்தரித்து மோசடி! ஹரியாணா வாக்காளராக இடம்பெற்ற பிரேசில் மாடல்!

SCROLL FOR NEXT