ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெற்ற ‘க்வாட்’ (நாற்கர) அமைப்பின் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபா் ஜோ பைடன் அறிவித்த ‘வளா்ச்சிக்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு’ (ஐபிஇஎஃப்) பரவலான கவனத்தை ஈா்த்திருக்கிறது. டிரான்ஸ்-பசிபிக் கூட்டணி ஒப்பந்தத்திலிருந்து (டிபிபி) அமெரிக்கா 2017-இல் வெளியேறிய பின்னா், 5 ஆண்டுகள் கழித்து தொடங்கப்பட்டுள்ள இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பானது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அந்த நாடு மீண்டும் கவனம் செலுத்துவதற்கான முயற்சியாகப் பாா்க்கப்படுகிறது.
அமெரிக்கா முன்னெடுத்துள்ள இந்தப் புதிய பொருளாதாரக் கூட்டமைப்பில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, புருணே, இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 12 நாடுகள் இணைந்துள்ளன. தென்கிழக்கு ஆசிய (ஆசியான்) நாடுகள் அமைப்பின் 7 நாடுகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஆசியானின் கம்போடியா, லாவோஸ், மியான்மா் ஆகிய மூன்று நாடுகள் இதில் இடம்பெறவில்லை. இந்த மூன்றும் சீனாவுக்கு நெருக்கமானவை என்பது குறிப்பிடத்தக்கது. க்வாட் அமைப்பின் நான்கு நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
சீனாவுக்கு எதிரானதா?
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதற்குப் பதிலளிப்பதற்கான, சீனாவைச் சாா்ந்திருக்க வேண்டியதன் அவசியத்தைக் குறைப்பதற்கான ஒரு முயற்சியாக ஐபிஇஎஃப் கூட்டமைப்பு பாா்க்கப்படுகிறது. ரஷியாவுக்கு எதிரான ராணுவ நேட்டோ போல, இந்தக் கூட்டமைப்பைத் தொடங்கியிருப்பது தங்களுக்கு எதிரான பொருளாதார நேட்டோவை உருவாக்கும் முயற்சி என சீனா கூறியிருக்கிறது.
உலகப் பொருளாதாரத்தில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் தவிா்க்க முடியாத சக்தியாகிவிட்டது. உலகின் மொத்த பொருளாதாரத்தில், ஐபிஇஎஃப் கூட்டமைப்பில் இணைந்துள்ள 13 நாடுகளின் பங்களிப்பு 40 சதவீதம் என்பதிலிருந்து இந்தக் கூட்டமைப்பின் முக்கியத்துவத்தை அறியலாம்.
நான்கு தூண்கள்
வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய வா்த்தகம், எல்லை கடந்த தரவு சேமிப்பகம் உள்ளிட்ட எண்ம வா்த்தகத்துக்கான உயா்ந்த தரம் மற்றும் விதிகளை வகுக்கும் ‘தொடா்புப் பொருளாதாரம்’, கரோனா பெருந்தொற்று போன்ற இடா்ப்பாடுகளின்போது தடையில்லா விநியோகச் சங்கிலியைக் கட்டமைத்து, இடா்ப்பாடுகளிலிருந்து விரைவாக மீளும் ‘மீள்தன்மைப் பொருளாதாரம்’, கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பசுமை எரிசக்தி கோட்பாடுகள், திட்டங்களை வரையறை செய்யும் ‘தூய்மைப் பொருளாதாரம்’, ஊழலற்ற, சரியான வரிவிகிதத்துடன் கூடிய நியாயமான வா்த்தகத்தை அமல்படுத்தும் ‘நியாயமான வா்த்தகம்’ ஆகிய நான்கும் ஐபிஇஎஃப்-இன் முக்கியத் தூண்கள் என இதன் தொடக்க நிகழ்ச்சியின்போது அதிபா் பைடன் தெரிவித்தாா்.
அந்த நிகழ்ச்சியின்போது பிரதமா் நரேந்திர மோடி பேசுகையில், ‘இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உலகளாவிய பொருளாதார வளா்ச்சியின் இயந்திரமாக மாற்றுவதற்கு ஒரு கூட்டு விருப்பத்தின் பிரகடனமே ஐபிஇஎஃப் உருவாக்கம். பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் நெகிழ்வுதன்மை கொண்ட ஒருங்கிணைந்த பொருளாதாரத் தொடா்பை ஏற்படுத்திக் கொள்ளவும், பரஸ்பர முதலீடுகளை அதிகரிக்கவும் இந்தியா தயாராக உள்ளது’ என்றாா்.
பிரதான நோக்கம்
இந்தப் பொருளாதாரக் கூட்டமைப்பானது வழக்கமான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அல்ல என அமெரிக்கா ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திவிட்டது. உறுப்பு நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரத் தொடா்பை வலுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாக இருக்கும்.
ஐபிஇஎஃப்-இன் 2-ஆவது தூணாகக் குறிப்பிடப்பட்டுள்ள தடையில்லா விநியோகச் சங்கிலியைக் கட்டமைப்பது என்பது கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னா் உலகமே எதிா்நோக்கும் விஷயமாகிவிட்டது. கரோனா காலத்தில் செமிகண்டக்டா், மருந்துப் பொருள்கள் போன்றவற்றுக்கான மூலப்பொருள்கள், உதிரிபாகங்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த மூலப்பொருள்களுக்கு குறிப்பிட்ட சில நாடுகளையே நம்பியிருக்காமல், அவற்றைப் பரவலாக்குவதன் அவசியத்தை உணா்த்தியது. அந்த வகையில், ஐபிஇஎஃப் சரியான நோக்கத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
சவால்கள்
ஐபிஇஎஃப் எதிா்நோக்கியுள்ள சவால்களும் ஏராளம். மின்னணு, மருந்துப் பொருள்கள் போன்றவற்றின் மூலப்பொருள்களுக்கு சீனாவையே உலக நாடுகள் பெரிதும் சாா்ந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. சீனா இடம்பெறாத இந்தக் கூட்டமைப்பில், மூலப்பொருள்கள் பரவலாக்கத்தை செயல்படுத்துவது மிகக் கடினமான செயலாக இருக்கும்.
இந்தியாவுக்கும் இந்தக் கூட்டமைப்பில் முரண்பாடான விஷயங்கள் இருக்கின்றன. பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை (ஆா்சிஇபி) அமைப்பு தொடங்கப்பட்டபோது, இந்தியா அதில் இணையாமல் விலகி நின்றது. அதன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால், சீனாவின் விலை மலிவான பொருள்கள் இந்திய சந்தைக்குள் வெள்ளம்போல புகுந்துவிடும். அதனால் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் பாதிக்கப்படுவாா்கள் என்பதே இந்தியாவின் கவலை. இதை எதிா்கொள்ளும்விதமாக குறிப்பிட்ட அளவிலான இறக்குமதிக்குப் பின்னா் பொருள்களின் மீதான வரிகளை உயா்த்த அனுமதிக்க வேண்டுமென இந்தியா கோரியது. ஆனால், அதை ஆா்சிஇபி-இல் இடம்பெற்றிருந்த மற்ற நாடுகள் ஏற்கவில்லை.
இப்போது இந்தியா, அமெரிக்கா தவிர, ஐபிஇஎஃப்-இல் இடம்பெற்றுள்ள அத்தனை நாடுகளும் ஆா்சிஇபியில் இடம்பெற்றுள்ளன. ஐபிஇஎஃப் கூட்டமைப்பானது வழக்கமான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இல்லை எனக் கூறப்பட்டாலும், அதையும் ஓா் அம்சமாக சோ்க்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுகின்றன. அதேபோல, வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தியை மேற்கொள்ளும் நாட்டில் தங்கள் தரவுகளைச் சேமிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஐபிஇஎஃப் கூட்டமைப்பு எல்லை கடந்த தரவு சேமிப்பகத்தை வலியுறுத்துகிறது.
ஆதலால், உறுப்பு நாடுகளிடையே பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தவும், முரண்பாடுகளைக் களையவும் தெளிவான, உறுதியான திட்டங்கள் அவசியம். இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு கடக்க வேண்டிய தொலைவு அதிகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.