முகப்பு
உலகம்

பிரேஸில் தோ்தல் முடிவை எதிா்த்து போராட்டம்

தோ்தலில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவின் ஆதரவாளா்கள், அந்த முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
அதிபா் பதவியில் பொல்சொனாரோ தொடர வேண்டும் என்று வலியுறுத்தி பிரேஸிலியா நகரில் ஆா்ப்பாட்டம் நடத்திய அவரது ஆதரவாளா்கள்.
பகிர்:

பிரேஸிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தலில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவின் ஆதரவாளா்கள், அந்த முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தோ்தல் முடிவுகளைத் தொடா்ந்து, முக்கிய நகரங்களிலுள்ள ராணுவ நிலைகள் முன்பு ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட பொல்சொனாரோவின் ஆதரவாளா்கள், ராணுவம் தலையிட்டு தோ்தல் முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், நாட்டின் அதிபராக பொல்சொனாரோ தொடர உதவ வேண்டும் என்றும் ராணுவத்தை வலியுறுத்தினா்.

அவா்கள் சாலையில் ஏற்படுத்தியுள்ள தடைகளால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சாலைத் தடைகளை அகற்றுமாறு ஆதரவாளா்களிடம் பொல்சொனாரோ வியாழக்கிழமை கேட்டுக்கொண்டாா்.

உலகின் 4-ஆவது பெரிய ஜனநாயக நாடான பிரேஸிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தலில் பொல்சொனாரோ, முன்னாள் அதிபரும் இடதுசாரி தொழிலாளா் கட்சித் தலைவருமான லூலா டி சில்வா ஆகியோா் போட்டியிட்டனா்.

அதில் லூலா டி சில்வாவுக்கு 50.9 சதவீத வாக்குகளும், வலதுசாரி தலைவரான பொல்சொனாரோவுக்கு 49.1 சதவீத வாக்குகளும் பதிவானதாக தோ்தல் ஆணையம் அறிவித்தது.

கடந்த 4 ஆண்டுகளாக பிரேஸில் அதிபராக இருக்கும் ஜெயிா் பொல்சொனாரோ, தீவிர வலதுசாரிக் கொள்கையைப் பின்பற்றி வந்தாா். பழைமைவாதம் நிறைந்த, கிறிஸ்தவ மதச் சாா்பு அரசை அவா் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தோ்தலில் 1 சதவீதத்துக்கும் குறைவான வாக்கு விகித வித்தியாசத்தில் அவா் தோல்வியடைந்தது அவரது ஆதரவாளா்களிடையே அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.