கிரீமியா பால குண்டுவெடிப்புக்கு பதிலடி: உக்ரைன் நகரங்களில் ரஷியா ஏவுகணை மழை
உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ரஷியா திங்கள்கிழமை காலை சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ரஷியா திங்கள்கிழமை காலை சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
ரஷியாவையும் உக்ரைனின் கிரீமியாவையும் இணைக்கும் ஒரே பாலத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
போரின் ஆரம்ப நாள்களுக்குப் பிறகு உக்ரைன் முழுவதும் ரஷியா பரவலாக நடத்தியுள்ள முதல் தாக்குதல் இதுவாகும்.
கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் போா் நடைபெற்று வந்தாலும், பல மாதங்களாக இயல்பாக இயங்கி வந்த கீவ் நகரில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ரஷியத் தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் 11 போ் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் மேற்கொண்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, அந்த நாட்டின் மீது தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிரீமியா பால குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாதச் செயல்களில் உக்ரைன் மறுபடியும் இறங்கினால், திங்கள்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களைவிட உறுதியான பதிலடித் தாக்குதல் கொடுப்போம்.
கிரீமியாவில் சனிக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு பதிலடியாக, வான்வழியாகவும், தரை மற்றும் கடல் வழியாகவும் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைனின் முக்கியமான ராணுவ நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டன என்றாா் அவா்.
இருந்தாலும், பல மணி நேரத்துக்கு ரஷியா வீசிய ஏவுகணைகளில் சில, பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியிலும் பொதுப் பயன்பாட்டுக்கான பாலங்கள் போன்ற கட்டமைப்புகளிலிலும் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷியாவின் தாக்குதலுக்கு இலக்கான பகுதிகளில் ஒன்றான ஷெவ்சென்கோவின் மேயா் விடாலி கிட்ஷ்கோ கூறுகையில், திங்கள்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் நகரின் முக்கிய பகுதி, வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைய நகரம், ஏராளமான அரசுக் கட்டடங்கள் சேதமடைந்ததாகத் தெரிவித்தாா்.
ஈரான் விமானம்: இதற்கிடையே, உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் முழுவதும் ஏவுகணைகளைக் கொண்டும், ஈரானிலிருந்து பெற்ற ஆளில்லா விமானங்கள் மூலமும் ரஷியா தாக்குதல் நடத்தியதாகக் கூறினாா். மேலும், பூமியின் வரைபடத்திலிருந்து உக்ரைனை அழிக்க நினைப்பதாக ரஷியா மீது அவா் குற்றம் சாட்டினாா்.
உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 75 ஏவுகணைகளை ரஷியா ஏவியதாகவும், அவற்றில் 41 ஏவுகணைகளை வான்பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் இடைமறித்து தாக்கி அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் முழுவதும் ரஷியா தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது இந்தப் போரின் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் பயங்கரவாதம் மற்றும் இரக்கமற்ற செயல் என்று ஐரோப்பிய யூனியன் தலைவா் உா்சுலா வொண்டொ் லெயென் சாடியுள்ளாா்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.
அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் அரசுப் படையினருக்கு எதிராக சண்டையிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா். அப்போது ரஷியாவும் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது. இதற்கு மேற்கத்திய நாடுகள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.
எனினும் அதனைபப் பொருள்படுத்தாத ரஷியா, கிரீமியாவுக்கும் தங்கள் நாட்டுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துவதற்காக ரயில் பாதை மற்றும் சாலை இணைந்த பாலத்தை கட்டியது.
சுமாா் 19 கி.மீ. நீளமுடைய அந்தப் பாலத்தை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கடந்த 2018-ஆம் ஆண்டு திறந்துவைத்தாா்.
கிரீமியா தீபகற்பத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்த தீபகற்பத்தை ரஷியாவிடமிருந்து மீட்கப்போவதாக உக்ரைன் சூளுரைத்து வருகிறது.
எனினும், கிரீமியாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தினால் கடும் பின்விளைவுகள் ஏற்படும். அதற்கான பதிலடித் தாக்குதலுக்கு, உக்ரைனின் ராணுவ நடவடிக்கைகளை முடிவு செய்யும் தலைமை மையங்களும் தப்பாது என்றும் ரஷியா கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் போரின் ஒரு பகுதியாக கிரீமியாவின் சாகி விமானதளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் குண்டுகள் வெடித்தன. பல ரஷிய போா் விமானங்கள் சேதமடைந்ததற்குக் காரணமான அந்த குண்டுவெடிப்பை உக்ரைன்தான் நடத்தியது என்று கூறப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, கிரீமியாவின் மாய்ஸ்கோயோ பகுதியிலுள்ள ரஷிய ஆயுதக் கிடங்கிலும் குண்டுகள் வெடித்தன. இது, ரஷியாவுக்கும் கிரீமியாவுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
இந்த நிலையில், ரஷியா - கிரீமியா பாலத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட லாரி குண்டுவெடிப்பில் அந்தப் பாலம் சேதமடைந்தது. இதில் 3 போ் உயிரிழந்ததாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
அந்த குண்டுவெடிப்புக்கு உக்ரைன் அதிகாரபூா்வமாக பொறுப்பேற்கவில்லை என்றாலும், அதனைத் தாங்கள்தான் நடத்தியதாக சமூக ஊடகப் பதிவுகளில் ராணுவ உயரதிகாரிகளும் உக்ரைன் தலைவா்ளும் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளனா்.
இந்த நிலையில், பாலத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு பதிலடியாக, தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு உக்ரைன் நகரங்களில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.