முகப்பு
உலகம்

ட்விட்டர் நிறுவனத்தின் 75 சதவீத ஊழியர்களை எலான் மஸ்க் பணிநீக்கம் செய்வாரா ?

எலான் மஸ்க் சமூக ஊடக தளத்தின் உரிமையாளரானால், ட்விட்டர் ஊழியர்களில் 75 சதவீதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

எலான் மஸ்க் சமூக ஊடக தளத்தின் உரிமையாளரானால், ட்விட்டர் ஊழியர்களில் 75 சதவீதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும், ஆட்குறைப்பு திட்டம் எதுவும் இல்லை என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், மைக்ரோ-பிளாக்கிங் தளத்தின் உரிமையாளராக மாறினால், ட்விட்டரின் பெரும்பாலான பணியாளர்கள்  75 சதவீதத்தை குறைக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியானது. 

இருப்பினும், ஆட்குறைப்பு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று ட்விட்டர் நிறுவனம் என்று பதிலளித்துள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் பொது ஆலோசகர் சீன் எட்ஜெட் கூறுகையில்,  ட்விட்டர் நிறுவன ஒப்பந்தம் நிறைவு பெறும் நிலையில், இதுபோன்ற பொது வதந்திகள் மற்றும் ஊகங்களை நீங்கள் சந்திக்கலாம்.

மேலும், ட்விட்டர் இணைப்பு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதால், ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து எதுவும் திட்டமிடப்படவில்லை என்று கூறினார்.

ட்விட்டர் நிறுவன விற்பனையும் - எலான் மஸ்க் தொடர் அறிக்கையும்: 

கடந்த ஜனவரி மாத இறுதியில் எலான் மஸ்க் ட்விட்டரின் பங்குகளை சிறிது சிறிதாக வாங்கத் தொடங்கினார். மார்ச் மாத பாதியில் ட்விட்டர் நிறுவனத்தில் 5 சதவிகித பங்குகளை தன்வசப்படுத்தினார்.

ட்விட்டர் பக்கத்தில் 80 மில்லியன் ஃபாலோவர்களுடன் செயல்பட்டு வந்த எலான் மஸ்க் ட்விட்டருக்கு மாற்றாக ஒரு சமூக வலைதளத்தை உருவாக்க நினைத்தார். மேலும், ட்விட்டரில் சுதந்திரமான கருத்துகள் முன்வைக்கப்பட முடியாமல் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்த மஸ்க், கடந்த மார்ச் மாதம் இது குறித்து ட்விட்டர் நிர்வாக இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர், ட்விட்டரில் தனது பங்குகளின் சதவிகிதம் அதிகரிப்பது குறித்து ட்விட்டர் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியதுடன் அதன் தலைமைச் செயல் அதிகாரியுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், ட்விட்டரை வாங்குவது அல்லது அதற்கு மாற்றாக புதிய சமூக வலைதளம் உருவாக்குவது குறித்தும் அறிவித்தார்.

ஏப்ரல் மாதத்தில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரராக மாறினார்.  மொத்த ட்விட்டர் பங்குகளில் 9 சதவிகிதத்தை மஸ்க் பெற்றிருந்தார். அந்த பங்குகளின் மதிப்பு 3 பில்லியன் டாலர்கள். 

பின்னர், ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக எலான் மஸ்க் மாறினார். ஆனால், அவருக்கு ஒரு நிபந்தனை வைக்கப்பட்டது. அதன்படி, ட்விட்டர் நிறுவனத்தில் 14.9 சதவிகித்திற்கும் அதிகமான பங்குகளை மஸ்க்  வாங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 11 ஆம் தேதி ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரி பராக் அக்ரவால், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக இணைய முடியாது என அறிவித்தார்.

ஏப்ரல் 14 இல் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தார்.

இதையடுத்து ஏப்ரல் 15 இல் எலான் மஸ்கின் ட்விட்டரை வாங்கும் திட்டத்திற்கு எதிராக ஒருமித்த கருத்தோடு ட்விட்டர் நிர்வாக இயக்குநர்கள் சார்பில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 21 இல் எலான் மஸ்க் 46.5 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்திற்கு விலை பேசினார். இதனால், ட்விட்டர் நிர்வாக இயக்குநர்கள் எலான் மஸ்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டது.

ஏப்ரல் 25 இல் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்க விரும்புவதாக தெரிவித்த மஸ்க், அதனை தனது சொந்த நிறுவனமாக  மாற்ற நினைத்தார். அதற்கு அவர், ட்விட்டரில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக காரணம் கூறினார்.

பின்னர், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக, டெஸ்லா நிறுவனத்தின் 8.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை  விற்பதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

இதனிடையே, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். ட்விட்டரில் எத்தனைப் போலி கணக்குகள் உள்ளது என்பதை கணக்கிடப்போவதாக அவர் தெரிவித்தார். இதனால், ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன. டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் உயர ஆரம்பித்தது. 

ட்விட்டரில் உள்ள போலியான கணக்குகள் தொடர்பான விவரங்களை அந்த நிறுவனம் வழங்க மறுப்பதால் தனது ட்விட்டரை வாங்கும் எண்ணத்தை முடித்துக் கொள்ளப் போவதாக அச்சுறுத்தினார். இதனையடுத்து, ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் மீது வழக்கு தொடுக்கும் என அச்சுறுத்தியது.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை உறுதி செய்யக் கோரி எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடுத்தது. எலான் மஸ்க் பதிலுக்கு ட்விட்டர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கினை அக்டோபரில் நீதிமன்றம் விசாரிக்கும் என அறிவித்தார்.

ஏப்ரல் மாதத்தில் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இரு தரப்பிற்கும் அக்டோபர் 28 ஆம் தேதி வரை விவரங்களை வழங்குவதற்கு நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. இரு தரப்பினரும் விவரங்களை வெளியிடத் தவறினால், இதுதொடர்பான விசாரணை நவம்பர் மாதம் நடைபெறும். 
 

முழு கட்டுரையைப் படிக்க →