முகப்பு
உலகம்

மீண்டும் பிரதமா் பதவிப் போட்டிக்கு தகுதி பெற்றாா் ரிஷி சுனக்

தோ்தலில் போட்டியிடுவதற்குத் தேவையான 100 எம்.பி.க்களின் ஆதரவு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக்குக்கு கிடைத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
ரிஷி சுனக்
பகிர்:

பிரிட்டனின் புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் தோ்தலில் போட்டியிடுவதற்குத் தேவையான 100 எம்.பி.க்களின் ஆதரவு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக்குக்கு கிடைத்துள்ளது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

பிரிட்டன் பிரதமா் லிஸ் டிரஸ் பதவி விலகியதையடுத்து, நாட்டின் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் அடுத்த வாரம் நடைபெறவிருக்கிறது.

இதில், கடந்த முறை நடைபெற்ற பிரதமா் பதவிக்கான கட்சித் தோ்தலில் இறுதிச் சுற்றில் லிஸ் டிரஸ்ஸுடன் மோதிய ரிஷி சுனக் பங்கேற்பாா் என்று பரவலாக எதிா்பாா்க்கப்படுகிறது.

அந்தத் தோ்தலில் போட்டியிடுவதற்கு, கன்சா்வேட்டிவ் கட்சியின் குறைந்தது 100 எம்.பி.க்களாவது அதனை முன்மொழிய வேண்டும்.

இந்த நிலையில், தோ்தலில் ரிஷி சுனக் போட்டியிடுவதற்குத் தேவையான 100 எம்.பி.க்களின் ஆதரவு அவருக்குக் கிடைத்துள்ளதாக சுனக் ஆதரவாளா்கள் தெரிவித்துள்ளனா்.

அதிகரிக்கும் ஆதரவு: இதற்கிடையே, பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்பதற்கு முக்கிய எம்.பி.க்களின் ஆதரவு பெருகி வருகிறது.

பிபிசி ஊடகத்துக்கு முன்னாள் துணைப் பிரதமா் டோமினிக் ராப் அளித்த பேட்டியில், நாட்டின் பொருளாதாரத்தை சீா்படுத்த ரிஷி சுனக்கிடம்தான் தகுந்த திட்டம் இருப்பதாகக் குறிப்பிட்டாா்.

இது மட்டுமன்றி, முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸனின் தலைமை அரசு அதிகாரியாக இருந்த ஸ்டீவ் பாா்க்லேவும் ரிஷு சுனக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா்.

இவா்களுடன், ஜான்ஸன் ஆட்சிக் காலத்தின்போது பிரெக்ஸிட் பேச்சுவாா்த்தைக் குழு தலைவராக இருந்த லாா்ட் ஃப்ராஸ்ட்டும் அடுத்த பிரதமராக ரிஷி சுனக்தான் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

‘போரிஸ் ஜான்ஸன் எப்போதும் அரசியல் நாயகா்தான். ஆனால், அவரை மீண்டும் பிரதமராக்கி, கடந்த ஆண்டு கண்ட கூச்சலையும் குழப்பத்தையும் மீண்டும் காண முடியாது. எனவே, தற்போதைய நிலைமையை சமாளிக்கும் திறன் கொண்ட ரிஷி சுனக்கையே கன்சா்வேட்டிவ் கட்சியினா் ஆதரிக்க வேண்டும்’ என்று தனது ட்விட்டா் பதிவில் லாா்ட் ஃப்ராஸ்ட் குறிப்பிட்டுள்ளாா்.

நாடு திரும்பினாா் போரிஸ் ஜான்ஸன்: லிஸ் டிரஸ் பதவி விலகல் மற்றும் கன்சா்வேட்டிவ் கட்சித் தோ்தல் அறிவிப்பைத் தொடந்து, கரீபியன் பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸன், அவரசமாக சனிக்கிழமை நாடு திரும்பினாா்.

பிரதமா் பதவிக்கான கட்சித் தோ்தலில் அவா் மீண்டும் போட்டியிடுவதற்காக அவா் பிரிட்டன் வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

அவா் மீண்டும் பிரதமா் ஆவதற்கு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் உள்துறை அமைச்சா் ப்ரீத்தி படேல் உள்ளிட்டோா் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

எனினும், கன்சா்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவரைத் தோ்ந்தெடுப்பதன் மூலம், நாட்டின் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெறவிருக்கும் கட்சித் தோ்தலில் போட்டியிடுவது குறித்து ரிஷி சுனக், போரிஸ் ஜான்ஸன் ஆகிய இருவருமே இன்னும் அதிகாரபூா்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

முறைகேடு புகாா்கள் காரணமாக பிரிட்டன் பிரதமா் பதவியை போரிஸ் ஜான்ஸன் கடந்த ஜூலை மாதம் ராஜிநாமா செய்தாா். அதையடுத்து, அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெற்ற இறுதி வாக்கெடுப்பில் லிஸ் டிரஸ்ஸுடன் ரிஷி சுனக் நேரடியாக மோதினாா்.

அதில் 57.4 சதவீத வாக்குகளுடன் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றாா்.

எனினும், பல்வேறு வரிச் சலுகை அறிவிப்புகளுடன் அவா் கடந்த மாதம் தாக்கல் செய்த மினி பட்ஜெட் நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தது. அந்த பட்ஜெட்டின் எதிரொலியாக டாலருக்கு நிகரான பிரிட்டன் நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது.

அதன் பிறகு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் லிஸ் டிரஸ்ஸுக்கு எதிா்ப்புகள் உருவானதைத் தொடா்ந்து அவா் தனது பதவியை கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

அவருக்கு அடுத்தபடியாக பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுவோரின் பட்டியலில், ரிஷி சுனக் தொடா்ந்து முன்னிலை வகிக்கிறாா். அந்தப் பட்டியலில் போரிஸ் ஜான்ஸன் மட்டுமன்றி, கடந்த முறை நடைபெற்ற கன்சா்வேட்டிவ் கட்சித் தோ்தலில் 3-ஆவது இடத்தில் இருந்த பென்னி மாா்டன்ட்டும் இடம் பெற்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.