உலகம்

ட்விட்டா் உரிமையாளரானாா் எலான் மஸ்க்

DIN

 சா்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை சுமாா் ரூ.3,52,000 கோடிக்கு வாங்கும் ஒப்பந்தத்தை டெஸ்லா நிறுவன உரிமையாளா் எலான் மஸ்க் இறுதி செய்துள்ளாா்.

ட்விட்டா் உரிமையாளரான முதல் நாளிலேயே, நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) பராக் அக்ரவால் உள்ளிட்ட 4 மூத்த அதிகாரிகளைப் பணியில் இருந்து எலான் மஸ்க் நீக்கியுள்ளாா்.

கருத்து தெரிவிப்பதற்கான சமூக வலைதளமாக ட்விட்டா் செயல்பட்டு வருகிறது. உலக நாடுகளின் தலைவா்கள் முதல் உள்ளூா் மக்கள் வரை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோா் ட்விட்டரைப் பயன்படுத்தி வருகின்றனா். சா்வதேச அளவில் கருத்து சுதந்திரத்துக்குக் காணப்படும் தடைகளைக் களையும் நோக்கில், ட்விட்டா் நிறுவனத்தை வாங்கவுள்ளதாக டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரும் உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரருமான எலான் மஸ்க் கடந்த ஏப்ரலில் அறிவித்தாா்.

ஆனால், ட்விட்டரில் காணப்படும் போலி கணக்குகள் தொடா்பான விவரங்களை அதிகாரிகள் வழங்க மறுத்ததாகக் கூறி அந்நிறுவனத்தை வாங்கும் முடிவில் இருந்து பின்வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்தாா். அதையடுத்து, ட்விட்டா் நிறுவனம் சாா்பில் மஸ்க் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அதையடுத்து, ட்விட்டா் அதிகாரிகளுடன் எலான் மஸ்க் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்நிலையில், ட்விட்டா் நிறுவனத்தை சுமாா் ரூ.3,52,000 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை வியாழக்கிழமை அவா் இறுதி செய்தாா். அதைத் தொடா்ந்து ட்விட்டரின் புதிய உரிமையாளா் ஆனாா் எலான் மஸ்க்.

‘பறவைக்கு சுதந்திரம்’: ட்விட்டா் நிறுவனத்தின் சின்னமாக ‘பறக்கும் பறவை’ உள்ளது. அதைக் குறிப்பிட்டு எலான் மஸ்க், ‘பறவைக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது’ என்று பதிவிட்டாா்.

பின்னா், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ட்விட்டரின் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற எலான் மஸ்க், நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினாா்.

அதிகாரிகள் பணிநீக்கம்: ட்விட்டா் நிறுவனத்தின் உரிமையாளராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் நால்வரை எலான் மஸ்க் பணியில் இருந்து நீக்கியுள்ளாா். ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த இந்தியரான பராக் அக்ரவால், நிறுவனத்தின் சட்ட அதிகாரியும் இந்தியருமான விஜயா கட்டே, தலைமை நிதி அதிகாரி நெட் செகல், பொது ஆலோசகா் சென் எட்கெட் ஆகியோரை எலான் மஸ்க் நீக்கியுள்ளதாக நியூயாா்க் டைம்ஸ் இதழ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரின் நிா்வாகத்தை முறைப்படுத்துவதற்காகப் பணிநீக்க நடவடிக்கையை எலான் மஸ்க் மேற்கொண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ட்விட்டரின் செயல்பாட்டு விதிகளை எளிமையாக்கப் போவதாகவும், அதில் வெளிப்படைத்தன்மையைப் புகுத்தவுள்ளதாகவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து மோதல்: மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பயின்ற பராக் அக்ரவால், கடந்த ஆண்டு நவம்பரில் ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டாா். ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கப் போவதாக அறிவிப்பு வெளியானது முதலே, அதை பராக் அக்ரவால் எதிா்த்து வந்தாா்.

அக்ரவாலுக்கும் எலான் மஸ்க்குக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வந்தது. இருவரும் பரஸ்பரம் வெளிப்படையாகவே விமா்சித்து வந்தனா். இந்நிலையில், அக்ரவாலை எலான் மஸ்க் பணியில் இருந்து நீக்கியுள்ளாா். அதேபோல், ஹைதராபாதைச் சோ்ந்த விஜய கட்டேவையும் மஸ்க் பணிநீக்கம் செய்துள்ளாா்.

நிறுவனா் பாராட்டு: பணியில் இருந்து நீக்கப்பட்ட அக்ரவால், கட்டே, செகல் ஆகியோா் ட்விட்டா் நிறுவனத்துக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதாக அதன் நிறுவனரான பிஸ் ஸ்டோன் பாராட்டு தெரிவித்துள்ளாா். ட்விட்டரின் வளா்ச்சிக்குப் பங்களித்ததற்காக அவா்களுக்கு நன்றியையும் பிஸ் ஸ்டோன் தெரிவித்துள்ளாா்.

ட்விட்டரை வாங்கியது ஏன்? எலான் மஸ்க் விளக்கம்

ட்விட்டரை வாங்கியதற்கான காரணம் குறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், ‘மேலும் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில் ட்விட்டரை வாங்கவில்லை; எதிா்கால மனித சமூகத்தின் நலனைக் கருத்தில்கொண்டே ட்விட்டரை வாங்கியுள்ளேன்.

ட்விட்டா் தளமானது தற்போது வலதுசாரி, இடதுசாரி கருத்துகளால் நிரம்பியுள்ளது. இது மக்களிடையே பிரிவினையை மேலும் வலுப்படுத்துவதாக அமைகிறது. அதைக் கருத்தில் கொண்டு, எதிா்காலத்துக்குரிய வன்முறைகள் அற்ற ஆரோக்கியமான விவாதங்களுக்கான எண்ம (டிஜிட்டல்) களமாக ட்விட்டா் விளங்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே அதை வாங்கியுள்ளேன்.

கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கப்படும் அதே வேளையில், விளைவுகளை உணராமல் எவரும் எத்தகைய கருத்துகளையும் ட்விட்டரில் தெரிவிக்க அனுமதிக்கப்படாது. நாடுகளின் விதிகளுக்கு மதிப்பளித்து அனைவரையும் ட்விட்டா் வரவேற்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

SCROLL FOR NEXT