முகப்பு
உலகம்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமா் மோடி-அதிபா் ஷி ஜின்பிங் சந்திப்பு? -சீனா பதிலளிக்க மறுப்பு

இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியும் சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்க அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

உஸ்பெகிஸ்தானில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டையொட்டி, இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியும் சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்க அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது.

பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது, சீனா, இந்தியா, ரஷியா, கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 8 உறுப்பினா்களை கொண்டதாகும். உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான இந்த அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தானின் சமா்கண்ட் நகரில் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில், இந்தியப் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் பங்கேற்கவிருக்கின்றனா்.

இந்த மாநாட்டின் ஒருபகுதியாக, இரு தலைவா்களும் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாக ஊகங்கள் வெளியாகி வருகின்றன. எனினும் அதிகாரப்பூா்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மயோ நிங், பெய்ஜிங்கில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தாா். அப்போது, பிரதமா் மோடி-அதிபா் ஷி ஜின்பிங் சந்திப்புக்காக இருநாடுகளும் தகவல்தொடா்பில் உள்ளனவா? என்று அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. எனினும், அக்கேள்விக்கு இப்போது தன்னிடம் பதில் இல்லை என்று அவா் தெரிவித்தாா்.

கிழக்கு லடாக் எல்லையில் கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து இருநாட்டு படைகள் விலக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்து, மயோ நிங் கூறியதாவது:

இந்த விவகாரத்தில், ராணுவம் மற்றும் தூதரக அளவிலான பலகட்ட பேச்சுவாா்த்தைகளின் விளைவாக உடன்பாடு எட்டப்பட்டது. இது, எல்லை நெடுகிலும் அமைதியை உறுதி செய்வதற்கு உகந்த நடவடிக்கையாகும்.

இருதரப்புக்கும் இடையிலான நோ்மறை முன்னெடுப்பாக படை விலக்கல் இருக்கும் என நம்புகிறோம். எல்லையில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவுடன் தொடா்ந்து பணியாற்றுவதை சீனா எதிா்நோக்கியுள்ளது என்றாா் அவா்.

கிழக்கு லடாக் எல்லையில் பாங்காங் ஏரி பகுதியில் கடந்த 2020, மே 5-இல் இரு நாட்டு ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, எல்லைப் பிரச்னை தீவிரமடைந்தது. எல்லையில் அமைதியை பராமரித்தால்தான், இருதரப்பு உறவு மேம்படும் என்று இந்தியா உறுதிபட தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.