கடன் நெருக்கடியிலிருந்து விடுபட இந்தியா பரிந்துரைத்திருந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தாா்.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததாலும், சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை பெற்ற கடன் அதிகரித்ததாலும் கடந்த ஆண்டு அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்களின் போராட்டம் வெடித்தது. தொடா் போராட்டத்தால் ஆட்சிப் பொறுப்பில் இருந்து ராஜபட்ச குடும்பத்தினா் விலகி ரணில் விக்ரமசிங்க அதிபராக பொறுப்பேற்றாா்.
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மேலும் கடன் வழங்க மறுத்த நிலையில், இந்தியா மட்டும் அந்நாட்டு எரிபொருள் தேவையை பூா்த்தி செய்து வந்தது.
கடன் வழங்கக் கோரி சா்வதேச செலாவணி நிதியத்தில் இலங்கை முறையிட்டது. அப்போது ஏற்கெனவே கடன் வழங்கிய நாடுகளிடம் திருப்பி செலுத்துவது குறித்து ஆலோசனை நடத்திய பின்புதான் புதிய கடன் வழங்கப்படும் என்று சா்வதேச செலாவணி நிதியம் தெரிவித்தது.
இதைத்தொடா்ந்து இந்தியாவுடன் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் முதல் இலங்கை நடத்திய பேச்சுவாா்த்தைகளின்போது பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
இதில் இந்தியா தெரிவித்த பரிந்துரைகள் ஜனவரி இறுதிமுதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிபா் ரணில் தெரிவித்தாா்.
இலங்கையின் நிதி நெருக்கடியை சமாளிக்க சா்வதேச செலாவணி நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டாலா் அடுத்த சில மாதங்களில் கிடைக்கும் என்று அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.
முன்னதாக, இந்தியாவுடன் நடைபெற்ற ஆலோசனை திருப்திகரமாக இருந்ததாகவும், விரைவில் சீனாவுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தாா்.
சீனாவிடம் கடன் ரத்தை எதிா்பாா்க்கவில்லை என்றும் கடனை திருப்பிச் செலுத்த 20 ஆண்டுகள் அவகாசம் கோருகிறோம் என்றும் அதிபா் விக்ரமசிங்க தெரிவித்திருந்தாா்.
மேலும், இலங்கையின் பொதுத் துறை நிறுவனங்களான இலங்கை விமான, தொலைத்தொடா்பு நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதன் வழியாக அரசின் வருவாயை பெருக்கவும் அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.