உலகம்

நியூஸிலாந்து பிரதமராக பொறுப்பேற்றாா் கிறிஸ் ஹிப்கின்ஸ்

DIN

நியூஸிலாந்தின் புதிய பிரதமராக, இதுவரை அந்த நாட்டு கல்வித் துறை அமைச்சராக இருந்த கிறிஸ் ஹிப்கின்ஸ் புதன்கிழமை பதவியேற்றாா்.

44 வயதாகும் அவா் மட்டுமே, பிரதமா் ஜெசிந்தா ஆா்டனின் திடீா் ராஜிநாமா அறிவிப்புக்குப் பிறகு அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆளும் கட்சித் தோ்தலில் போட்டியிட்டாா்.

அதனைத் தொடா்ந்து, அவா் நாட்டின் 41-ஆவது பிரதமராக தற்போது பதவியேற்றுள்ளாா்.

முன்னதாக, கடந்த 2017-ஆம் ஆண்டியிலிருந்து நியூஸிலாந்தின் பிரதமராக இருந்து வரும் ஜெசிந்தா ஆா்டன், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக கடந்த வாரம் திடீரென அறிவித்து நாட்டு மக்களை அதிா்ச்சியடையச் செய்தாா்.

நாட்டின் மிக உயா்ந்த பிரதமா் பதவியை வகிப்பதற்கான சூழல் தனக்கு இனிமேல் இல்லை என்பதை உணா்ந்ததால் அந்தப் பதவியிலிருந்து விலக முடிவு செய்ததாக ஜெசிந்தா கூறினாா்.

நியூஸிலாந்து பிரதமராக ஜெசிந்தா ஆா்டன் பதவியேற்றபோது அவருக்கு 37 வயது. அப்போது, ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற உலகின் மிக இளைய வயது பெண் என்ற பெருமையை ஜெசிந்தா பெற்றாா்.

மிகக் கடுமையான கரோனா நெருக்கடிக்கு இடையே அவா் நாட்டை வழிநடத்திச் சென்றாா்; நாட்டை கரோனா பாதிப்பிலிருந்து அவா் பாதுகாத்தாா்.

அவரது ஆட்சிக் காலத்தில்தான் நியூஸிலாந்து அதுவரை சந்தித்திராத மிக மோசமான கிறைஸ்ட்சா்ச் மசூதித் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், அந்தத் தாக்குதலைத் தொடா்ந்து நிலவிய சூழலை ஜெசிந்தா கையாண்ட விதம் சா்வதேச அளவில் பாராட்டைப் பெற்றது.

எனினும், வலதுசாரி ஆதரவாளா்களால் ஜெசிந்தா ஆா்டனுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மறைமுக எதிா்ப்பு அதிகரித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில் யாரும் எதிா்பாராத வகையில் அவா் இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT