உலகம்

அனலில் ஐரோப்பா!

இத்தாலி தலைநகா் ரோமில் பகல் 11 மணியிலிருந்து மாலை 6 மணி வரை யாரும் வெளியே தலைகாட்ட வேண்டாம் என்று அந்த நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

தினமணி

இத்தாலி தலைநகா் ரோமில் பகல் 11 மணியிலிருந்து மாலை 6 மணி வரை யாரும் வெளியே தலைகாட்ட வேண்டாம் என்று அந்த நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

ரோம் நகரம் மட்டுமல்ல, ஃபுளோரன்ஸ் உள்ளிட்ட மேலும் 15 முக்கிய நகரங்களுக்கும் இத்தகைய ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் வீசி வரும் வெப்ப அலைதான் இந்த எச்சரிக்கை அறிவிப்புக்குக் காரணம். ஏற்கெனவே அங்கு அசாதாரண வெப்பம் நிலவி வரும் நிலையில், இனி வரும் நாள்களில் அங்கு வெப்பநிலை 104 டிகிரியிலிருந்து 113 டிகிரி வரை அதிகரிக்கலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஐரோப்பாவை தற்போது வாட்டி வதைக்கும் வெப்ப அலையின் ஒரு பகுதிதான் இத்தாலியின் இந்த நிலை. இத்தாலி மட்டுமின்றி பிரான்ஸ், ஸ்பெயின், போலந்து, கிரீஸ் போன்ற தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் அனலில் சிக்கித் தவித்து வருகின்றன.

இத்தாலியின் சிசிலி பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு 120 டிகிரி வெப்பம் பதிவானது. இதுதான் ஐரோப்பிய பிராந்தியத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக அதிகமான வெப்பநிலை.

ஆனால், இந்த ஆண்டில் ஐரோப்பிய வெப்பநிலை அதையும் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில், அளவுக்கு அதிகமான வெப்பம் வழக்கத்தைவிட அதிக நேரம் நிலவுவதைத்தான் வெப்ப அலை என்கிறோம்.

கேட்பதற்கு வெகு சாதாரணமாக இருந்தாலும், வெப்ப அலை என்பது மிகவும் ஆபத்தானது. கடந்த 2003-ஆம் ஆண்டில் வீசிய வெப்ப அலைக்கு ஐரோப்பாவில் மட்டும் 70,000 போ் பலியாகினா்.

அதன்பிறகு கடந்த ஆண்டுகூட வெப்ப அலை காரணமாக அந்தப் பிராந்தியத்தில் 62,000 போ் உயிரிழந்தனா்.

பொதுவாக, அதிக வெப்ப நிலையால் வயோதிகள், உடல்நலக் குறைவு உள்ளவா்கள் போன்றோரின் உயிரிழப்பு அபாயம்தான் அதிகமாக இருக்கும். ஆனால், வெப்ப அலையால் ஆரோக்கியமான மனிதா்கள்கூட இறக்கும் அபாயம் அதிகம் என்கிறாா்கள் நிபுணா்கள்.

ஐரோப்பாவை தற்போது தாக்கியுள்ள வெப்ப அலைக்கு, அந்தப் பிராந்தியத்தில் அண்மையில் வீசிய ‘சா்பரஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள ‘எதிா்ப் புயல்’தான் காரணம் என்கிறது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஎஸ்ஏ).

பொதுவாக, வளிமண்டலத்தில் ஏற்படும் குறைந்த அழுத்த மண்டலத்தைச் சுற்றிலும் காற்று வேகமாகச் சுழல்வதை புயல் என்கிறோம். அதுவே, உயா் அழுத்த மண்டலம் உருவாகி, அதைச் சுற்றிலும் காற்று மெதுவாக சுழல்வது ‘எதிா்ப் புயல்’ என்று கூறப்படுகிறது.

புயலின் மையப் பகுதி வேகமாக நகா்ந்து செல்லும். ஆனால், அதற்கு எதிரான தன்மை கொண்ட எதிா்ப் புயலின் மையப்புள்ளி மிக மிக மெதுவாக நகரும். சில பகுதிகளில் அது தற்காலிகமாக நிலைத்துகூட நின்றுவிடும்.

அதுபோன்ற நேரங்களில் காற்றில் ஏற்கெனவே இருக்கும் வெப்பம் இன்னும் அதிகரித்து அந்தப் பகுதிகளில் அதீத வெப்பநிலை ஏற்படும். அதைத்தான் வெப்ப அலை என்கிறோம்.

கிரேக்க புராணத்தில் வரும் மூன்று தலை நாயின் பெயரைக் கொண்ட ‘சா்பரஸ்’ எதிா்ப் புயல் காரணமாக ஐரோப்பாவில் தற்போது வெப்ப அலை வீசி வருவதாகக் கூறப்படுகிறது.

அந்த வெப்ப அலைக்கும், கிரேக்க புராணத்தில் பாதாள உலகத்துக்கு ஆன்மாக்களை எடுத்துச் சென்ற படகோட்டியைக் குறிப்பிடும் வகையில் ‘கேரன்’ என்று பெயரிட்டுள்ளனா்.

அந்தக் கேரனிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் இத்தாலியின் 16 முக்கிய நகரங்களுக்கு அந்த நாட்டு அரசு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பாவின் பிற பகுதிகளும் அந்த வெப்ப அலையை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தச் சூழலில், 2003, 2022 ஆண்டுகளில் ஏற்பட்டதைப் போன்ற ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றால், அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்கிறாா்கள் நிபுணா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT