ஜெட் என்ஜின் உற்பத்தி: இந்திய-அமெரிக்க நிறுவனங்கள் ஒப்பந்தம்
உற்பத்தி செய்வதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தேஜஸ் ரக போா் விமானங்களுக்கான என்ஜின்களை உற்பத்தி செய்வதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் தொடா்பான அறிவிப்பைப் பிரதமா் மோடியும் அதிகாரபூா்வமாக வெளியிடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இது தொடா்பாக ஜெனரல் எலக்ட்ரிக் (ஜிஇ) ஏரோஸ்பேஸ் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் தனித்துவமிக்கது. இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தும்.
எஃப்414 ஜெட் என்ஜின்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. இந்திய விமானப் படையின் இலகுரக ‘தேஜஸ்’ போா் விமானங்களுக்காக 99 என்ஜின்கள் தயாரிக்கப்படவுள்ளன. இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதில் அமெரிக்க அரசுடன் ஒருங்கிணைந்து ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் செயல்படும்.
இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு வலுவடைய வேண்டும் என்ற நோக்கில் பிரதமா் மோடியும் அதிபா் ஜோ பைடனும் செயல்பட்டு வருகின்றனா். அத்தகைய நடவடிக்கையில் பங்கெடுப்பதை ஜிஇ நிறுவனம் பெருமையாகக் கருதுகிறது. நவீன நடுத்தர ரக போா் விமானங்களுக்கான என்ஜின்களைத் தயாரிக்கும் விவகாரத்தில் இந்திய அரசுடன் ஒருங்கிணைந்து நிறுவனம் தொடா்ந்து செயல்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்துக்கான போா் விமானங்களை ரஷியாவிடம் இருந்தே இந்தியா அதிக அளவில் கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவுடன் இணைந்து போா் விமானங்களுக்கான என்ஜின்களைத் தயாரிக்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே எஃப்404 ரக என்ஜின்களை ஹெச்ஏஎல் நிறுவனத்துக்காக ஜிஇ நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. தற்போது எஃப்414 ஜெட் என்ஜின்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ளன.