இம்ரான் கான் கைதுக்கு எதிர்ப்பு: பாகிஸ்தானில் கலவரம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டுக்கு வெளியே கலவரம் வெடித்துள்ளது.
லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டுக்கு வெளியே கலவரம் வெடித்துள்ளது.
இஸ்லாமாபாத் நீதிமன்றத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில், இஸ்லாமாபாத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்களை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், இம்ரான் கானை கைது செய்வதற்காக அவரது வீடு அமைந்துள்ள ஜமான் பூங்கா அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இம்ரான் கானின் கட்சித் தொண்டர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் கல்வீச்சு, தடியடி போன்ற சம்பவங்களால் பலர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்ட பிறகு இன்று இரவுக்குள் இம்ரான் கான் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | நீட் விலக்கு மசோதாவின் நிலை என்ன? குடியரசுத் தலைவர் பதில்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூங்கா ஒன்றில் நடந்த பேரணியின்போது, காவல்துறை அதிகாரிகளையும் நீதித்துறையையும் ‘பயங்கரமான’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, நீதிபதி ஜெபா சவுத்ரி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதற்காக இம்ரான் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.