ஹமாஸ் தாக்குதலில் எல்லைப் படை அதிகாரிகள் உட்பட 30 காவல் அதிகாரிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் கொல்லப்பட்ட வீரர்களின் பெயர்களை இஸ்ரேல் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதேசமயம் சனிக்கிழமை காலை முதல் நடந்த சண்டையில் இதுவரை 26 வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை ஞாயிற்றுக்கிழமை கூறியதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ஹகாரி செய்தியாளர்கள் சந்திப்பில், ஹமாஸ் ஊடுருவல்காரர்களிடமிருந்து 29 இடங்கள் கைப்பற்றப்பட்டன. நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் இறந்துள்ளனர்.
டஜன் கணக்கான பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பல நகரங்களில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம் என்றார். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது சனிக்கிழமை காலை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில், 100-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா். 500-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.
2,500 ராக்கெட் குண்டுகள் மட்டுமே ஹமாஸ் வீசியதாகவும், பயங்கரவாதிகள் ஊடுருவிய 22 இடங்களில் சண்டை தொடா்வதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதலில் காஸா பகுதியில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 1,600-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம் அடைந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்தாா். இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை 2ஆவது நாளாக தொடா்ந்து வருகிறது. இதனிடையே காஸாவில் வசித்து வரும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காஸாவுக்கு வழங்கப்படும் குடிநீர், எரிபொருள், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை நிறுத்தப்போவதாகவும் கூறியுள்ளார். இருத்தரப்பினர் இடையே நடைபெற்று வரும் இந்த சண்டையில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் 300 பேரும், பாலஸ்தீனத்தில் 200க்கும் மேற்பட்டோரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.