முகப்பு
உலகம்

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் பலி 18 ஆண்டுகள் காணாத உச்சம்

இந்த ஆண்டில் இஸ்ரேலியப் படையினருக்கும், பாலஸ்தீன ஆயுதக் குழுவினருக்கும் இடையிலான மோதலில் பலியானவா்களின் எண்ணிக்கை கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:53 AM
(கோப்புப் படம்)
பகிர்:

ஜெருசலேம்: இந்த ஆண்டில் இஸ்ரேலியப் படையினருக்கும், பாலஸ்தீன ஆயுதக் குழுவினருக்கும் இடையிலான மோதலில் பலியானவா்களின் எண்ணிக்கை கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்து மேற்கு ஆசிய நாடுகளுக்கான ஐ.நா. தூதா் டாா் வெனெஸ்லாண்ட் கூறியதாவது:

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை நிறுத்துவதற்கான அரசியல் தீா்வு காண்பதற்கு சில அடிப்படை பிரச்னைகள் களையப்பட வேண்டும்.

எனினும் அதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் இல்லாதது அபாயகரமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வெற்றிடம் முழுவதையும் மத அடிப்படைவாதிகளும், தீவிர வலதுசாரிகளும் நிரப்பியுள்ளனா்.

இதன் விளைவாக, இந்த ஆண்டில் மட்டும் இரு தரப்பிலும் நடத்தப்பட்ட பரஸ்பர தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்களும், சுமாா் 30 இஸ்ரேலியா்களும் உயிரிழந்துள்ளனா் என்றாா் அவா்.

இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் அமைந்துள்ள தற்போதைய கூட்டணி அரசு, அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிகத் தீவிரமான வலதுசாரி அரசு என்று கூறப்படுகிறது. பாலஸ்தீன விவகாரத்தில் அந்த அரசு மிகக் கடுமையாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தங்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை வேட்டையாடுவதாகக் கூறி, மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் படையினா் தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக இஸ்ரேலியா்கள் மீது பாலஸ்தீனா்கள் தாக்குதல் நடத்துவதும் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.