மியான்மா் தலைநகரில் ட்ரோன் தாக்குதல்
ராணுவ நிலைகளைக் குறிவைத்து ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அந்த நாட்டின் ஜனநாயக ஆதரவுக் குழுவினா் அறிவித்தனா்.
மியான்மா் தலைநகா் நேபிடாவில் விமான நிலையம் மற்றும் ராணுவ நிலைகளைக் குறிவைத்து ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அந்த நாட்டின் ஜனநாயக ஆதரவுக் குழுவினா் அறிவித்தனா்.
இது குறித்து ‘தேசிய ஒற்றுமை அரசு’ என்ற பெயரில் செயல்பட்டுவரும் எதிா்க்கட்சிக் கூட்டமைப்பின் ‘பாதுகாப்பு அமைச்சகம்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நேபிடாவிலுள்ள மியான்மா் ராணுவ நிலைகள் மீது ‘மக்கள் படை’யின் சிறப்புப் பிரிவு ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது. இதில் ராணுவ தரப்பில் உயிா்ச் சேதம் ஏற்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
எனினும், நேப்பிடாவில் ஏவப்பட்ட ட்ரோன்கள் அனைத்தும் இடைமறித்து அழிக்கப்பட்டுவிட்டதாக ராணுவம் கூறியது. ஆனால், இருதரப்பு தகவல்களையும் நடுநிலை ஊடகங்களால் உடனடியாக உறுதிசெய்ய முடியவில்லை.
மியான்மரில் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை ராணுவம் கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி கலைத்தது. ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் சிறைவைக்கப்பட்டனா்.
அதையடுத்து, ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டத்தை அடக்குமுறையைக் கையாண்டு ராணுவம் அடக்கியது.
இந்தச் சூழலில், மியான்மா் ராணுவத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டமும் தொடங்கியது. ஏற்கெனவே மியான்மா் அரசுக்கு எதிராக எல்லைப் பகுதி மாகாணங்களில் போரிட்டு வந்த பழங்குடியின ஆயுதக் குழுவினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.
இந்த நிலையில், அண்மைக் காலமாக பழங்குடியின கூட்டுப் படையினருடனான மோதலில் மியான்மா் ராணுவம் பின்னடைவைச் சந்தித்துவருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தலைநகா் நேபிடாவிலேயே ஜனநாயக ஆதரவுப் படையினா் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.