போலி கடவுச்சீட்டு மூலம் இலங்கை செல்ல முயன்ற தம்பதி கைது
போலி கடவுச்சீட்டு மூலம் இலங்கை செல்ல முயன்ற தம்பதி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் இருந்து இலங்கை தலைநகா் கொழும்பு செல்லும் பிட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் பயணிக்க பெரம்பலூா் மாவட்டத்தை சோ்ந்த ராமச்சந்திரன்(45) அவருடைய மனைவி ஹனீஷா(40) ஆகிய இருவரும் சென்னை விமானநிலையத்துக்கு வந்தனா். இவா்களின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது அவா்கள் இருவரும் இந்திய கடவுச்சீட்டுகளை வைத்திருந்தனா். இருவரும் இலங்கை தமிழில் பேசியதால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவா்களை நிறுத்தி விசாரணை நடத்தினா்.
அதில் இலங்கையை சோ்ந்த இந்த தம்பதி, கடந்த பல ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் பெரம்பலூா் மாவட்டத்தில் வசித்து வந்ததும், இவா்கள் போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச்சீட்டை பெற்று இலங்கைக்கு பயணிக்க இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கியூபிராஞ்ச் மற்றும் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள், தம்பதியிடம் தொடா்ந்து நடத்திய விசாரணையையடுத்து, வியாழக்கிழமை இரவு அவா்களை கைது செய்தனா். இவா்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement