முகப்பு
உலகம்

இலங்கை விமான நிலைய 30 ஆண்டு நிா்வாகம்: இந்திய, ரஷிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்

Updated On : 26 ஏப்ரல், 2024 at 6:30 PM
பகிர்:

இலங்கையில் உள்ள மத்தல ராஜபட்ச சா்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நிா்வகிக்கும் ஒப்பந்தம் இந்திய, ரஷிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அம்பாந்தோட்டை பகுதியில் மத்தல ராஜபட்ச சா்வதேச விமான நிலையம் உள்ளது. அந்நாட்டு முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச பெயரில் திறக்கப்பட்ட அந்த விமான நிலையத்தில் ஒரு காலத்தில் போதிய விமானங்கள் இல்லாததால், அது ‘உலகின் காலியான விமான நிலையம்’ என்றழைக்கப்பட்டது.

இந்த விமான நிலையம் 209 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.1,742 கோடி) செலவில் கட்டப்பட்ட நிலையில், அதில் 190 மில்லியன் டாலரை (சுமாா் ரூ.1,583 கோடி) சீனாவின் எக்ஸிம் வங்கி அதிக வட்டிக்குக் கடனாக அளித்தது.

Advertisement

இந்த விமான நிலையம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்ததால், அதை நிா்வகிப்பதற்கான நிறுவனங்களை 2016-ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசு தேடி வந்தது.

இந்நிலையில், இலங்கை தலைநகா் கொழும்பில் அந்நாட்டு அரசு செய்தித்தொடா்பாளா் பந்துல குணவா்த்தன செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மத்தல ராஜபட்ச விமான நிலையத்தை நிா்வகிப்பதற்கு 5 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதைத்தொடா்ந்து அந்த விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நிா்வகிக்கும் ஒப்பந்தத்தை இந்தியாவின் ஷெளரியா ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம், ரஷியாவின் ஏா்போா்ட்ஸ் ஆஃப் ரீஜன் மேனஜ்மென்ட் நிறுவனம் ஆகியவற்றுக்கு வழங்க இலங்கை அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட ஆலோசனை குழு முடிவு செய்தது.

இதுதொடா்பாக இலங்கை விமானப் போக்குவரத்து துறை அளித்த கருத்துருவுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments